உலகக்கோப்பை 2027 : ரோஹித் – கோலி விளையாடுவது ரொம்ப சவால்…ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!
இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள் அப்படி இருந்தால் உலகக்கோப்பை போட்டியில் விளையாடுவது சவாலாக இருக்கும் என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், 2025 ஜூலை 21 அன்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து பேசினார். இரண்டு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் இந்த உலகக் கோப்பையில், இவர்கள் இருவரும் ஆடுவது சவாலாக இருக்கலாம் என்று அவர் கூறினார்.
அவர் அப்படி சொன்னதற்கு முக்கியமான காரணம், இருவரும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடுகிறார்கள், டெஸ்ட் மற்றும் டி20 வடிவங்களில் இல்லை. இதனால், அவர்களால் விளையாட்டின் வேகத்தை தக்கவைப்பது கடினமாக இருக்கும் என்று ஹர்பஜன் எச்சரித்தார்.
இது பற்றி அவர் பேசுகையில் “2027 உலகக் கோப்பை இன்னும் இரண்டு ஆண்டுகள் தொலைவில் உள்ளது. விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் இப்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். எவ்வளவு திறமையான வீரராக இருந்தாலும், தொடர்ந்து எல்லா வடிவங்களிலும் விளையாடாமல் இருந்தால், கிரிக்கெட் விளையாட்டு முன்னேறிவிடும், ஆனால் வீரர்கள் பின்தங்கிவிடுவார்கள்,” என்று விளக்கினார்.
எம்எஸ் தோனியை உதாரணமாக எடுத்துக்கொண்டு, “தோனி இப்போது ஐபிஎல்-லில் மட்டுமே ஆடுகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன் இந்திய அணிக்காக தொடர்ந்து ஆடிய தோனியுடன் ஒப்பிடும்போது, இப்போது அவரது ஆட்டத்தில் வித்தியாஸம் தெரிகிறது. இதேபோல், விராட் மற்றும் ரோஹித்துக்கு ஒரு வடிவத்தில் மட்டும் ஆடுவது சிரமமாக இருக்கும்,” என்று அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியில் தோனியின் பங்களிப்பு குறித்து பேசிய ஹர்பஜன், “சிஎஸ்கே அணிக்கு தோனிக்கு பிறகு ஒரு மாற்றுத் தலைமைத்துவ திட்டம் இல்லை. ருதுராஜ் கெய்க்வாட் இப்போது கேப்டனாக இருந்தாலும், அணி நிர்வாகம் மற்றொரு விருப்பத்தை தயார் செய்யவில்லை. சுரேஷ் ரெய்னா 10 ஆண்டுகள் அணியில் இருந்தபோதும், அவரை கேப்டனாக உருவாக்கவில்லை,” என்று விமர்சித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.