உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.., நாளை மறுநாள் இந்த 2 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும்.!
மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை : கோவா – தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும், இது வடக்கு நோக்கி நகர்ந்து அடுத்த 36 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தாக்கத்தால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வருகின்ற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை தமிழகத்தின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம் :
இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.