கோவில்கள் அழிவதை தடுக்க அவற்றை பக்தர்களிடம் கொடுத்துவிடுங்கள்-சத்குரு..!

Default Image

”படிப்படியாக அழிந்து வரும் ஆயிரக்கணக்கான தமிழக கோவில்களை பாதுகாக்க, அவற்றை தமிழக அரசு பக்தர்களிடம் கொடுக்க வேண்டும்” என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான தனது ட்வீட்டை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் ஆகியோருக்கும் சத்குரு டேக் செய்துள்ளார்.

ட்வீட்டுடன் சேர்த்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சத்குரு பேசியிருப்பதாவது:

நம் தமிழ் கலாச்சாரத்திற்கு மூலமாக இருப்பது நம் கோவில்களும் நம் நெஞ்சில் இருக்கும் பக்தியும் தான். நம் மாநிலத்திற்கே கோவிலை தான் அடையாளமாக வைத்துள்ளோம்.

கோவில் என்பது தமிழ் மக்களுக்கு ஆன்மாவை போன்றது. இந்த ஆன்மா அரசாங்கத்தின் கையில் அடிமையாக இருப்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுக்கும் முடிவை நமது அரசாங்கம் எடுக்கவில்லை. 300 ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கிந்திய கம்பேனியானது நம் கோவில்களை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டது. அவர்கள் பக்தியினாலோ, ஆன்மீக ஆர்வத்தினாலோ நம் கோவில்களை கைப்பற்றவில்லை. கோவில்களில் இருந்த தங்க, வைர நகைகளையும் சொத்துக்களையும் களவாடுவதற்காகவே அவர்கள் அதை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

அத்தகைய பேராசையால் பிடிக்கப்பட்ட கோவில்கள் நாடு சுதந்திரம் பெற்று 74 ஆண்டுகள் ஆன பிறகும் அதே நிலையில் உள்ளது. இதை நினைத்தாலே என் மனம் மிகுந்த வேதனை கொள்கிறது.

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் சரியான பராமரிப்பு இன்றி பாழடைந்து போயுள்ளன. 2020-ம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் “11,999 கோவில்கள் ஒரு நாளில் ஒரு கால பூஜை கூட செய்ய போதிய பணம் இல்லை. 34,000 கோவில்களில் ஆண்டிற்கு ரூ.10,000-க்கும் குறைவாகவே வருவானம் வருகிறது. 37 ஆயிரம் கோவில்களில் பூஜை செய்வது, கோயிலை பராமரிப்பது, பாதுகாப்பது என அனைத்து பணிகளுக்கும் ஒரே ஒரு நபர் மட்டுமே இருப்பதாக” கூறப்பட்டுள்ளது.

இதே நிலை நீடித்தால், அடுத்த 100 ஆண்டுகளில் முக்கியமான 10 கோவில்களை தவிர்த்து மற்ற அனைத்து கோவில்களையும் கொன்றுவிடுவார்கள். கோவில்களை நீங்கள் இன்று இடித்தால், மக்கள் தங்கள் தெம்பால் மீண்டும் கட்டுவார்கள். ஆனால், இது அப்படி இல்லை. ’ஸ்லோ பாய்ஸன்’ போன்று மெல்ல மெல்ல கோவில்களை அழித்து சாகடிக்கின்றனர்.

கோவில்கள் பக்தர்கள் கையில் இருந்தால் தங்கள் உயிரே போனாலும் அதை பத்திரமாக பார்த்து கொள்வார்கள். அவர்கள் கோவில்களை தங்கள் உயிருக்கும் மேலாக மதிப்பாக வைத்து கொள்வார்கள். நம் நாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்தில் “எந்த மதமாக இருந்தால், அதை அந்த மதத்தை சார்ந்தவர்களே நடத்தி கொள்ள வேண்டும். வேறு யாரும் அதில் தலையிட கூடாது” என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இப்போது இருக்கும் மதம் மட்டும் அல்ல. நீங்கள் புதிதாக ஒரு மதத்தை உருவாக்கினாலும் அதற்கு நம் நாட்டில் சுதந்திரம் உள்ளது. உலகில் இருக்கும் எல்லா மதங்களும் நம் நாட்டில் கலந்துள்ளது. மற்றவர்கள் எல்லாருக்கும் இந்த சுதந்திரம் இருக்கும் போது, நம் கோவில்களுக்கு மட்டும் அடிமைத்தனம் உள்ளது. இதை நாம் மாற்றியாக வேண்டும். நம் நாட்டை நாம் ‘மதச்சார்பற்ற நாடு’ என சொல்கிறோம். அதன் அர்த்தம் என்னவென்றால், மதம் அரசாங்கத்தில் தலையிட கூடாது; அரசாங்கம் மதத்தில் தலையிட கூடாது.

ஆகவே, இந்த தலைமுறையில் நாம் கோவில்களை பாதுகாக்காவிட்டால், அடுத்த 50-100 வருடங்களில் கோவில்களே இல்லாமல் போய்விடும். இந்த கலாச்சாரத்திற்கு மூலமாகவும், உயிர்நாடியாகவும் இருக்கும் கோவில்கள் முற்றிலும் அழிந்துவிடும். அரசாங்கத்தில் இருக்கும் கட்சியாக இருந்தாலும் சரி மற்ற கட்சிகளாக இருந்தாலும் சரி நீங்கள் வரும் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமென்றால் இந்த உறுதியை மக்களுக்கு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இருக்கும் கோவில்கள் அரசாங்கத்தின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை பெற வேண்டும் என சத்குரு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Kallazhagar - Madurai
Ramadoss
retro karthik subbaraj
narendra modi ind vs pak war
modi and rajinikanth
Rajnath Singh