பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!
பச்சை பட்டுடுத்தி, ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை அணிந்து கொண்டு 'கோவிந்தா கோவிந்தா' என்ற பக்தர்களின் விண்ணைப் பிளக்கும் முழக்கத்திற்கிடையே வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்.

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அதன்படி, பச்சை பட்டுடுத்தி தங்கக்குதிரையில் வந்த கள்ளழகரை மக்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்றனர். காலை 5.45 முதல் 6.05 மணிக்குள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார்.
காலை 7.25 மணி வரை கள்ளழகர் வைகை ஆற்றில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். லட்சக்கணக்கான மக்கள், கோவிந்தோ… கோவிந்தோ… எனும் பக்தி முழக்கத்துடன் கள்ளழகரை வழிப்பட்டனர். கள்ளழகர் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினால் நாடு செழிக்கும் என நம்பப்படுகிறது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வை காண, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். மதுரையில் ஒவ்வொரு ஆண்டும், சித்திரை திருவிழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த (2025) ஆண்டு சித்திரைத் திருவிழா ஏப்ரல் 29 கொடியேற்றத்துடன் தொடங்கியது.
மே 6 அன்று மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகம் நடைபெற்றது. மே 8 அன்று மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெற்றது, இது திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வாகும். மே 9 மீனாட்சி திருத்தேரோட்டம் நடைபெற்றது, இதில் மீனாட்சி மற்றும் சுந்தரேஸ்வரர் தங்கத் தேரில் பவனி வந்தனர்.
மே 10 கள்ளழகர் புறப்பாடு, மே 11 நேற்று கள்ளழகர் எதிர்சேவை, இதை தொடர்ந்து, மே 12 (இன்று )ள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல், இது திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும்.