இந்தியாவில் 68% கொரோனா நோய் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது – லால் அகர்வால்!

- இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் கூறியுள்ளார்.
- குணமடைபவர்கள் எண்ணிக்கை 93.1% ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவில் கொரோனா தொற்று பரவளின் நிலை குறித்து மத்திய சுகாதாரத்துறை இணை செயலாளர் லால் அகர்வால் அவர்கள் பேசுகையில், நாட்டில் தினசரி கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு 68 சதவீதம் குறைந்துள்ளதாகவும், மீட்பு விகிதம் 93.1 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த மே மாதம் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியதாகவும், அதன் பிறகு 68% தற்பொழுது குறைந்துள்ளதாகவும், கடந்த மே 10ஆம் தேதி நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் எண்ணிக்கை உச்சத்தில் இருந்ததாகவும், அதன் பின்பாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 21 லட்சம் குறைந்து 56 சதவீதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் உள்ள 377 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாகவும், தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகி வந்த பல மாவட்டங்களில் தொடர்ச்சியாக பாதிப்புகள் குறைந்துள்ளதாகவும், அதே சமயம் 257 மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட தினசரி பாதிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 37 சதவீதம் பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களில் 43 சதவீதம் பேருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 32 மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் லால் அகர்வால் தெரிவித்துள்ளார்.