பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி..! உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90ஆக உயர்வு..!

Kenya Death toll

கென்யாவில் பாதிரியாரின் போதனையை கேட்டு பட்டினி கிடந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உள்ள கடற்கரை நகரமான மாலிண்டில் ‘குட் நியூஸ் இன்டர்நேஷனல் சர்ச்’ என்ற தேவாலயம் ஒன்று உள்ளது. இதன் தலைமை போதகராக பால் மெக்கன்சி என்பவர் அங்குள்ள மக்களுக்கு பல்வேறு போதனைகளை கூறி வந்துள்ளார். இந்நிலையில் அவர் தன்னைப் பின்பற்றும் மக்களிடம் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளாமல் பட்டினியாக இருந்தால் சொர்க்கம் சென்று கடவுளை சந்திக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதனால் பலரும் உண்ணாவிரதம் இருந்து உடல் மெலிந்த நிலையில் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, தகவல் அறிந்த காவல்துறையினர் குட் நியூஸ் இன்டர்நேஷனல் தேவாலயத்திற்கு அருகில் உள்ள ஷகாஹோலா காட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் காட்டில் புதைக்கப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரின் உடல்களை மீட்டனர். பதற்றம் அதிகரித்த நிலையில் போலீசார் தங்களது சோதனையைத்  தீவிரப்படுத்தினர்.

இந்த சோதனையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது. கண்டெடுக்கப்பட்ட உடல்களில் குழந்தைகளின் உடல்களும் உள்ளன என்றும் சடலங்களை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதில் பட்டினியாக இருந்தவர்களில் சிலர் உயிருடன் இருந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

மேலும், கென்யா செஞ்சிலுவைச் சங்கம் 212 பேரைக் காணவில்லை என்று புகாரளித்த நிலையில் காணாமல் போன 213 பேரை தேடும் பணி தொடர்கிறது. இந்த விவகாரத்தில் ஏராளமானோர் பலியாகிய நிலையில் பாதிரியார் பால் மெக்கன்சியை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்