சென்னை :மதுரையில் சொத்து வரி விதிப்பில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக, மதுரை மாநகராட்சியில் 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விதிகளை மீறி வரி குறைக்கப்பட்டு முறைகேடு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில், ”சில நாட்களுக்கு முன்பு மதுரை மாநகராட்சியில், சொத்து வரி விதிப்பதில் மிகப் பெரிய ஊழல் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், முன்னாள் உதவி கமிஷனர், மண்டலத் தலைவரின் உதவியாளர் உட்பட 8 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் மண்டலத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் கூறியதன் அடிப்படையில்தான் நாங்கள் சொத்து வரியைக் குறைத்தோம் என்று வாக்குமூலம் அளித்துள்ளனர். எப்போதும் குற்றம் செய்தவர்களைக் காப்பாற்ற முயலும் ஸ்டாலின், குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்ட திமுக மண்டலக் குழுத் தலைவர்களையாவது காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு அவர்களை ராஜினாமா செய்ய உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.
மதுரை மாநகராட்சி தவிர, ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் கோவை, திருநெல்வேலி ஆகிய மாநகராட்சிகளின் மேயர்களும் ஏற்கெனவே ராஜினாமா செய்துள்ளனர். மேலும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்ததாக சர்க்காரியா கமிஷனாலேயே குறிப்பிடப்பட்ட திமுக-வினர் வசம் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில், திமுக மேயர் மற்றும் தலைவர்களாக உள்ளவர்களை எதிர்த்து, எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கூறும் ஊழல் குற்றச்சாட்டுகளோடு, திமுக-வின் கவுன்சிலர்கள் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்களே ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவதும், உள்ளிருப்புப் போராட்டங்களை நடத்துவதும் என்று ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்குக் காரணம், உள்ளாட்சி பதவிகள் குடும்ப உறுப்பினர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, ‘கமிஷன்’, ‘கலக்ஷன்’, ‘கரப்ஷன்’ தங்கு தடையின்றி நடப்பதுதான். உள்ளாட்சி மன்றங்கள் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்டவை என்றாலும், இவை ‘உடன்பிறப்புகளின் குடும்ப ஆதிக்கத்திற்காக உருவாக்கப்பட்டவையோ’ என்ற சந்தேகம் எழுகிறது. இத்தகைய ஊழல்கள் மீண்டும் மீண்டும் எழுவது மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது. இந்நிலையில், விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் ஸ்டாலின், அடிக்கடி பொதுவெளியில் பேசி வரும் ‘உள்ளாட்சிகளில் நல்லாட்சி’ என்பது வெறும் வெற்று விளம்பரமாகவே, வாய்வீச்சாகவே தமிழக மக்கள் பார்க்கிறார்கள்” என்று கடுமையாக சாடியுள்ளார்.
unknown node