”எம்ஜிஆர், ஜெயலலிதா செய்ததும் சதிச் செயலா.?” – இபிஎஸுக்கு அமைச்சர் சேகர்பாபு கேள்வி.!

அறநிலை துறையின் சட்டத்தின்படி பள்ளிகளையும், கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் தொடங்கலாம் என்று எடப்பாடி பழனிசாமி கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் கொடுத்துள்ளார்.

Edappadi Palanisamy - Sekarbabu

சென்னை : கோவில் நிதியை கொண்டு கல்லூரிகள் அமைப்பது எந்த விதத்தில் நியாயம்? என எடப்பாடி பழனிசாமி பேசியதற்கு அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக, இன்று காலை செய்தியாளர்களை சந்தித்து பேசிய இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்ற காரணத்திற்காக எதிர்க்கட்சித் தலைவர் அறநிலையத்துறையை விமர்சித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை கல்லூரிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்கள்தான் பயில்கின்றனர். திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 4 கல்லூரிகள் தொடங்கப்பட்டு 2,500 பேர் படிக்கின்றனர். சோழர்கள் காலத்தின் கூட கோயில் சார்பில் கல்விச் சாலைகள் இருந்தன.

இந்து சமய அறநிலையத்துறை அறப்பணியுடன், அறியாமையை நீக்கும் கல்வி பணியையும் செயல்படுத்தி வருகிறது. வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மாணவர்களுக்கு தான் கல்லூரிகளில் சேர இடம் அளிக்கப்படுகிறது. அறநிலையத் துறையின் சட்டத்தின்படி பள்ளிகளையும், கல்லூரிகளையும், பல்கலைக்கழகங்களையும் தொடங்கலாம். அருகில் இருக்கும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் கோயில் நிதியில் கல்லூரிகள் இயங்குகின்றன.

ஏன், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் அறநிலையத்துறை சார்பில் கல்லூரிகள் திறக்கப்பட்டன, இதுவும் சதிச் செயலா? அதிமுக தலைவர்களை இபிஎஸ் ஏற்கவில்லை என தெளிவாகத் தெரிகிறது. பாஜக எனும் மலைப்பாம்பு அதிமுகவை சிறுக சிறுக விழுங்கி வருகிறது.

அதிமுக தலைவர்களும் அறநிலையத்துறை சார்பில் கல்வி நிலையங்களை தொடங்கியுள்ளனர். வரலாறு தெரியாமல் பேசுகிறார் இபிஎஸ். அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன் மருதமலை கோயில் சார்பாக பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் கோரிக்கை வைத்தார்.

அதிமுக எம்எல்ஏக்கள் பெரியபுள்ளான், அமுல் கந்தசாமி, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் கோயில் சார்பில் கல்லூரி வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்துள்ளனர். இப்படி இருக்கையில், வரலாறு தெரியாமல், சங்கிகள் வைக்கும் கோரிக்கையை இபிஎஸ் வெளிப்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்