‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையிட தடை – மம்தா பானர்ஜி அறிவிப்பு.!

தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிட தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜி அறிவித்துள்ளார்.
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ள நிலையில், படத்தை வெளியிட கூடாது என பலதரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்து வந்தது. ஆனால், படம் கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து படம் வெளியாகியுள்ள நிலையில், பலரும் படத்தை தடை செய்யவேண்டும் என்றும், பலரும் படத்திற்கு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்கள்.
தற்போது, தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதித்து மேற்கு வங்க அரசு இன்று அறிவித்துள்ளது. இந்த முடிவை முதல்வர் மம்தா பானர்ஜி அம்மாநிலச் செயலகத்தில் எடுத்துள்ளார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதில் இருந்தே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இப்படத்திற்கு பல மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
காஷ்மீர் பைல்ஸ் போன்று பெங்கால் படத்துக்கு பாஜக நிதியுதவி செய்கிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டிய பின்பு, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், வங்காளத்தில் அமைதியை நிலைநாட்டவும், வெறுப்பு குற்றங்கள் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னதாக, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் மக்களின் பதிலின் மோசமான காரணத்தை காரணம் காட்டி, தமிழ்நாடு முழுவதும் உள்ள மல்டிபிளக்ஸ்களில் இந்த சர்ச்சைக்குரிய படம் நேற்று முதல் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.