கர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸ்.. அடுத்த முதலமைச்சர் யார்? – கார்கே அறிவிப்பு

பாஜக தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்தியும் மக்கள் ஏமாறவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேட்டி.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் 130க்கும் மேற்பட்ட இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது. கர்நாடகாவில் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் காங்கிரஸ் 119 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வெற்றி உறுதி என கூறலாம்.
பாஜக 57 இடங்களில் முன்னிலை பெற்றுள்ள நிலையில், 8 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. எனவே, கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் இழந்த ஆட்சியை மீண்டும் தேர்தல் மூலம் அமைக்க உள்ளது. இதனால் தொண்டர்கள் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், வெற்றி முகத்தில் காங்கிரஸ் உள்ள நிலையில், செய்தியாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகத்தில் மோசமான ஆட்சி நிர்வாகத்துக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர்.
கர்நாடகாவில் அடுத்த முதலமைச்சர் யார் என்பது பற்றி கலந்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என அறிவித்தார். கர்நாடகாவில் பிரதமர், உள்துறை அமைச்சர், அமைச்சர்கள் என பாஜக தனது அனைத்து பலத்தையும் பயன்படுத்தியும் மக்கள் ஏமாறவில்லை உருக்கமாக கூறினார். காங்கிரஸ் தலைவராக கார்கே பொறுப்பேற்றபின் அவரது சொந்த மாநிலத்தில் நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.