ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதல்ல… ஆனால் தோனி அதனை எளிதாக்கினார்- ரவி சாஸ்திரி.!

Dhoni ravi

ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான காரியம் என எண்ணும்படி தோனி செய்து விட்டார் என ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக ஐசிசியின் அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தியது. இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 164/3 ரன்களுடன் ஐந்தாம் நாள் ஆட்டத்தை தொடங்கியதும் விக்கெட்கள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்து வீழ்ந்தது.

சிறப்பான தொடக்கத்தை கொடுத்த விராட் கோலியும் 49 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த ஜடேஜா டக் அவுட் ஆகி வெளியேற  இந்திய அணியின் நம்பிக்கையும் தளர்ந்தது. இறுதி நாளில் 280 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் இந்திய அணி களமிறங்கி 234 ரன்களுக்கு ஆல் அவுட் ஆக, ஆஸ்திரேலியா 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

இந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரும், வர்ணனையாளருமான ரவி சாஸ்திரி, இந்திய அணி ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதானது போல் முன்னாள் இந்திய கேப்டன் தோனி மாற்றிவிட்டார் என கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறும்போது, இந்திய அணி கடந்த 2013இல் ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராபி வென்ற பிறகு 10 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்ல முடியாமல் திணறி வருகிறது.

ஆனால் எம்.எஸ். தோனி தலைமையில் இந்திய அணி 2007 இல் டி-20 உலகக்கோப்பை, 2011இல் ஒருநாள் உலகக்கோப்பை, 2013இல் சாம்பியன்ஸ் ட்ராபி என 3 ஐசிசி கோப்பைகளை வென்றுள்ளது. ஐசிசி கோப்பைகளை வெல்வது எளிதான விஷயமல்ல ஆனால் தோனி அதனை எளிதானது போல் நமக்கு காட்டிவிட்டார் என்று ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்