எப்போது பார்த்தாலும் நேரு, இந்திரா காந்தி மீதுதான் தவறு என பழி போடுகின்றனர் – ஆ.ராசா காட்டம்.!
"இந்திய உளவுத்துறை என்ன செய்கிறது?” பஹல்காம் தாக்குதல், நிர்வாகத் திறமையின்மையையே காட்டுகிறது திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி : நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், ”திமுக எப்போதும் தேச ஒற்றுமையை வலியுறுத்தும் கட்சியாக இருக்கிறது. ஒரு காலத்தில் திமுக தனி தமிழ்நாடு கோரியது. ஆனால் போர் சூழலில் நாட்டின் நன்மைக்காக அந்த நிலைப்பாட்டை திமுக மாற்றிக்கொண்டது.
கார்கில் போர் சூழலில் கலைஞர் தலைமையிலான தமிழ்நாடு அரசு ரூ.100 கோடி நிதி வழங்கியது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாட்டிலேயே முதல்முறையாக ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக பேரணி நடத்தினார். ஆனால், பஹல்காம் தாக்குதலுக்காக பிரதமர் முதல் பாஜக எம்.பி., வரை ஒருவர் கூட வருத்தம் தெரிவிக்கவில்லை.
குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாலே வெற்றி எனக் கூறக் கூடாது. உளவுப் பிரிவும், RAW அமைப்பும் பல முன்னெச்சரிக்கைகளைக் கொடுத்த பிறகும் அரசு எந்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்யவில்லை. நாட்டை ஆளும் தகுதி பாஜகவுக்கு இல்லை.
அமெரிக்க துணை அதிபர் இந்தியப் பிரதமரை அழைத்து, தாக்குதல் நடக்கப் போவதாகக் கூறுவது உங்களுக்கு வெட்கமாக இல்லையா? பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்-ன் பேச்சு சிறுபிள்ளைத் தனமாக இருந்தது. அண்டை நாடுகளுடன் போர் ஏற்பட்டபோது நேரு எதையும் மறைக்கவில்லை.
எந்த விவகாரம் ஆனாலும் நேரு, இந்திரா, காங்கிரஸ் எனப் பேசுவதே பாஜகவினரின் வாடிக்கை. பாகிஸ்தான் தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்க துணை பிரதமர் நம் நாட்டுக்கு தெரியப்படுத்தியதாக வெளியுறவுத்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியிருப்பது வெட்ககேடானது.
நம் உளவு அமைப்புகள் என்ன செய்கிறது? பஹல்காம் தாக்குதல் முழுக்க முழுக்க அரசின் நிர்வாக தோல்வியால் நிகழ்ந்திருக்கிறது. உலக நாடுகள் எதுவுமே பாகிஸ்தானின் அத்துமீறலை கண்டிக்கவில்லை. வெளியுறவு கொள்கையில் இந்தியா நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருகிறது” என்று கடுமையாக சாடி பேசியுள்ளார்.