“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!
பாகிஸ்தானின் எந்த ஏவுகணையும் இந்தியாவை தொடக்கூட இல்லை. பாகிஸ்தானின் அனைத்து ட்ரோன்களையும் இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், ‘தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அவர்களின் கைகளைக் கட்டிவிட்டு போருக்கு அனுப்பக் கூடாது’ என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய பிரதமர் மோடி, ”தாக்குதல் நடத்துவது குறித்து முடிவு செய்ய ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது, பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட்டதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். பஹல்காம் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் இன்றுவரை தூக்கமில்லாத இரவுகளைக் கழிக்கும் அளவுக்கு நாம் அளித்த தண்டனை அமைந்துள்ளது.
இந்தியாவுக்கும் இந்திய மக்களுக்கும் எதிரான சதிச்செயல்தான் பஹல்காம் தாக்குதல். வகுப்புவாத விதையை தூவும் நோக்கத்தில் தான் பஹல்காமில் தாக்குதல் நடத்தி உள்ளார்கள். மத அடிப்படையில், பஹல்காமில் தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றனர்.
இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வல்லமையை ஆப்ரேஷன் சிந்தூர் நிரூபித்துள்ளது. பாகிஸ்தானின் விமானப்படை தளங்களை அழித்து ராணுவ கட்டமைப்பை இந்தியா சீர்குலைத்தது. ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய முப்படைகளின் ஒருங்கிணைந்த ஆற்றல் எப்படி இருக்கும் என பாகிஸ்தானுக்கு காட்டியுள்ளோம்.
பாகிஸ்தானின் மூலை முடுக்கெல்லாம் சென்று தாக்குதல் நடத்தியுள்ளோம், பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களை நாம் தவிடுபொடியாக்கினோம். அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அடிபணியாது என்பதை நிரூபித்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்படவில்லை, இந்தியா மீது பயங்கரவாத தாக்குதல் தொடர்ந்தால் நடவடிக்கை தொடரும்.
இந்தியா அளித்த பதிலடியால் நிலை குலைந்துபோன பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்துமாறு கெஞ்சியது. தாக்குதலை நிறுத்துமாறு எந்தவொரு நாடும் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை” என்று கூறியிருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025