அஜித் கொலை வழக்கு… இனிமே அழுக என்கிட்ட கண்ணீர் இல்லை நிகிதா வேதனை!
காய்கறி வாங்குவது, பெட்ரோல் நிரப்புவது போன்ற சாதாரண விஷயங்களைக்கூட செய்ய முடியாத அளவுக்கு ஊடகங்கள் என்னைப் பின்தொடர்கின்றன எனவும் வேதனையுடன் நிகிதா பேசியுள்ளார்.

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகைத் திருட்டு புகாரில் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சேர்ந்த பேராசிரியை நிகிதா என்பவர், கோயிலில் தனது 10 பவுன் நகை திருடப்பட்டதாக புகார் அளித்ததைத் தொடர்ந்து, அஜித்குமார் காவல்துறையினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
இந்த விசாரணையின் போது, காவலர்களின் கொடூரமான தாக்குதலால் அஜித்குமார் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
நிகிதா, இந்த வழக்கில் முக்கிய புகார்தாரராக இருந்தாலும், அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2011ஆம் ஆண்டு திருமங்கலம் காவல் நிலையத்தில் அவரது குடும்பத்தினர் மீது பண மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அவர் செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மதுரை சிபிஐ அலுவலகத்தில் இரண்டாவது முறையாக ஆஜரான பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த நிகிதா, “நானும் நிலமும் மருத்தப்படுகிறேன். இதற்கு மேல் அழுவதற்கு என்னிடம் கண்ணீர் இல்லை,” என வேதனையுடன் கூறினார்.
அஜித்குமாரின் மரணம் தனக்கு மிகுந்த வலியை அளிப்பதாகவும், தான் ஒரு எறும்பு கூட இறக்கக் கூடாது என நினைப்பவர் எனவும் அவர் தெரிவித்தார். நிகிதா மேலும் பேசுகையில், தனது புகாரைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களைப் பற்றி தனக்கு முழுமையாகத் தெரியாது எனவும், தன்னைப் பற்றி பரவும் அவதூறுகளைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை எனவும் கூறினார்.
இது குறித்து பேசிய அவர் “காய்கறி வாங்குவது, பெட்ரோல் நிரப்புவது போன்ற சாதாரண விஷயங்களைக்கூட செய்ய முடியாத அளவுக்கு ஊடகங்கள் என்னைப் பின்தொடர்கின்றன. இதனால் அஜித்குமாரின் தாயை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்க முடியவில்லை,” என அவர் வேதனை தெரிவித்தார்.
மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசப்படுவது சமூகத்துக்கு எந்தப் பயனையும் தராது எனவும், அனைவரும் ஒரு பக்கமாக மட்டுமே இந்த விவகாரத்தைப் பார்ப்பது வேதனையளிப்பதாகவும் கூறினார். நிகிதாவின் புகார் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. அவரது புகாருக்காக முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யப்படாமல், சிறப்பு தனிப்படை ஏன் விசாரணையில் இறங்கியது? நிகிதாவுக்கு ஆதரவாக இருக்கும் முக்கியப் புள்ளி யார்? என்பது போன்ற கேள்விகள் தொடர்ந்து எழுப்பப்படுகின்றன.
சிபிஐ, நிகிதா மற்றும் அவரது தாய் சிவகாமியிடம் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தியுள்ளது. இந்த வழக்கு ஆகஸ்ட் 20, 2025-க்குள் முடிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது!
July 30, 2025