அமலாக்கத்துறை கட்டுப்பாட்டில் உள்ளவரை முதல்வர் சந்திக்கலாமா…? – ஜெயகுமார்

நகமும் சதையும் போல் இருப்பதால்தான் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் முதல்வர் துடிக்கிறார் என ஜெயக்குமார் பேட்டி.
அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பதாக ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் தெரியவந்துள்ளது;அவருக்கு பை பாஸ் சர்ஜரி செய்ய ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அமலாக்கத்துறை தனது கடமையை செய்துள்ளது. அண்ணா நகர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது முதல்வர் ஏன் அமைதியாக இருந்தார் அப்போது ஏன் எதுவும் பேசவில்லை. ஆனால் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் மட்டும் நள்ளிரவில் ஆலோசனை நடத்துகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினும், அமைச்சர் செந்தில் பாலாஜியும் நகமும் சதையும் போல் இருப்பதால்தான் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் முதல்வர் துடிக்கிறார். நேற்று நடைபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது எப்படி? எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவரை கொண்டு செந்தில் பாலாஜி உடலை பரிசோதனை செய்ய வேண்டும்.
உடனடியாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய வேண்டும். இல்லையென்றால், ஆளுநர் தலையிட்டு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.