நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலையில் கைதான இளைஞரின் புகைப்படம் வெளியீடு.!
காதலைக் கைவிட சுர்ஜித் தொடர்ந்து வலியுறுத்தியும் கேட்காததால் கவின் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை : தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 படுகொலை சம்பங்கள் அரங்கேறியுள்ளன. நெல்லை, மதுரை, சென்னை, ஈரோடு என வடக்கு, தெற்கு மேற்கு என்று மூன்று திசைகளிலும் 4 படுகொலைகள் நடந்துள்ளது. குறிப்பாக, நெல்லையில் ஐ.டி. வேலையில் இருந்த பட்டியல் சமூக இளைஞர், காதல் விவகாரத்தில் இளைஞரால் ஆணவக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை அருகே நடந்த ஆணவக் கொலை வழக்கில் கைதான இளைஞர் சுர்ஜித் (வயது 24) என்பவரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. கைதான இளைஞர் சுர்ஜித் மீது பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் நெல்லை மாநகர் கே.டி.சி நகர் அஷ்டலட்சுமி தெருவில் நடைபெற்றது, இதில் கவின் (வயது 26) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார். கவினின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், சுர்ஜித்தின் பெற்றோரான சரவணக்குமார் மற்றும் கிருஷ்ணவேனி, இருவரும் காவல் துறையில் உதவி ஆய்வாளர்களாக பணிபுரிவதாகவும், அவர்களின் தூண்டுதலின் பேரில் இந்தக் கொலை நடந்ததாகவும் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, முக்காணி பகுதியில் கடந்த 3 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெற்றனர். எஸ்.ஐ.களாக உள்ள இருவரும் கைது செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்ட கவினின் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளனர்.