மணிப்பூரில் வெடித்த புதிய வன்முறை..! போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழப்பு..10 பேர் காயம்..!

மணிப்பூரில் வெடித்த புதிய வன்முறையில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்ததோடு, 10 பேர் காயமடைந்துள்ளனர்.
மணிப்பூரில் கடந்த மாதம் மே 3 ஆம் தேதி பட்டியலின பழங்குடி (எஸ்டி) அந்தஸ்து கோரி மெய்டேய் சமூகத்தின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெடித்த கலவரத்தில் இதுவரை 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்த வன்முறையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தரப்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மணிப்பூரில் நடைபெற்று வரும் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, மாநில அரசு சூரசந்த்பூரில் உள்ள பாதுகாப்பு முகாம்களில் தங்க வைத்துள்ளது.
இந்த நிலையால் மணிப்பூரின் மேற்கு காங்போக்பி பகுதியில் புதியதாக வன்முறை ஒன்று ஏற்பட்டுள்ளது. காங்போக்பி மாவட்டத்தின் காங்சுப் பகுதியில் உள்ள கிராமங்களை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், 10 பேர் காயமடைந்துள்ளனர்.