மகளிர் கால்பந்து அணிக்கு ரூ.60 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதலமைச்சர்!

கோப்பையை வென்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்று வரும், முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இவ்விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை பிடித்த சென்னை, செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்க உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தேசிய கால்பந்து சாம்பியன்ஷிப் தொடரில் வெற்றி பெற்ற தமிழ்நாடு மகளிர் கால்பந்து அணியை பாராட்டி, ரூ.60 லட்சம் ஊக்கத்தொகையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வின்போது, முதலமைச்சருடன், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உடனிருந்தனர்.
இதனிடையே, 27-ஆவது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு – ஹரியாணா அணிகள் மோதின.இதில் தமிழ்நாடு அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 5 ஆண்டுகளுக்குப் பின்னர் தற்போது மீண்டும் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கடைசியாக 2017-18-ம் சீசனில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.