மதுரை இரட்டை கொலை வழக்கு: உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!

இரட்டை கொலை வழக்கின் விசாரணை அதிகாரி செல்லூர் உதவி ஆணையர் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு.
கடந்த 2020-ல் மதுரை குன்னத்தூரில் ஊராட்சி தலைவர் உள்ளிட்ட இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரி செல்லூர் உதவி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. விசாரணையில் குளறுபடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில், காவல் உதவி ஆணையர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல் உதவி ஆணையர் விஜயகுமார் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யவும் அணையிட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கில் 2021-ல் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையையும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி, இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு குழுவை அமைக்க தென் மண்டல ஐ.ஜிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறப்பு குழு 2 மாதத்தில் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரிச்சியூர் அருகே குன்னத்தூரில் ஊராட்சி தலைவர் கிருஷ்ணராஜன், நண்பர் முனுசாமி 2020ல் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி கிருஷ்ணராஜனின் சகோதரர் ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கில் உண்மை குற்றவாளிகளை தப்பிவிடும் நோக்கில் காவல்துறையினர் செயல்படுவதாகவும் மனுதாரர் புகார் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர் தலைமறைவான நிலையில், தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க்கிற்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இரட்டை கொலை வழக்கில், உதவி ஆணையர் விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. கொலை வழக்கில் சிறப்பு விசாரணை நடத்தி நீதிமன்றத்துக்கு உதவிய தென் மண்டல ஐ.ஜி அஸ்ரா கர்க்கிற்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார். தென் மண்டல ஐ.ஜி மேற்கொண்ட ஆடியோ – வீடியோ முறை அனைத்து வழக்குகளிலும் பின்பற்றப்பட வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.