சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலத்தை காட்டும் – தொண்டர்களுக்கு முதலமைச்சர் மடல்!

யானைக்கு தும்பிக்கையால் ஆசிர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும் என முதலமைச்சர் மடல்.
கலைஞர் தந்த பயிற்சியுடன் களத்தில் வெல்வோம் என்று தொண்டர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மடல் எழுதியுள்ளார். அதில், மலைக்கோட்டை மாநகரில் காவிரிதான் கரை மீறிப் புரள்கிறதோ, கடல்தான் தமிழ்நாட்டின் நடுப் பகுதியில் புகுந்துவிட்டதோ என்று மலைக்கின்ற அளவுக்கு திருச்சியில் நேற்று நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில், 2024-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா (I.N.D.I.A) வின் வெற்றிக்குக் கட்டியம் கூறிடும் வகையில் கழகத்தினர் திரண்டிருந்தனர்.
மக்கள் திராவிட மாடல் அரசு மீது வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடவே அல்லும் பகலும் உழைத்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்கு உழைக்கின்ற ஆட்சியாகவும் மக்களுக்கான திட்டங்களை வழங்கும் ஆட்சியாகவும் உள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் பலன் தந்து வருகிறது. ஒவ்வொரு குடும்பத்திற்கும் குறைந்தபட்சம் ஏதேனும் ஒரு திட்டமாவது அவர்களின் மாதச் செலவை மிச்சப்படுத்தும் வகையில் இருந்து வருகிறது.
திராவிட மாடல் ஆட்சியின் நிர்வாகம் கடந்த 2 ஆண்டுகளில் இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய வகையில் செயலாற்றி வருகிறது. இந்தியாவை காத்திட I.N.D.I.A கூட்டணி உருவாகியிருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில், பாசிச சக்திகளை வீழ்த்தி, மகத்தான வெற்றி காண போகிறது I.N.D.I.A கூட்டணி. இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்க நாடாளுமன்றதல் களத்தில் நம் பணி முழுமை, முனைப்புடன் இருந்திட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும், பொய்கள் புற்றீசல் போன்றவை. அவை வேகமாகப் பரவினாலும் அவற்றுக்கு ஆயுள் குறைவு. உண்மைக்கு யானையின் பலம் உண்டு. அதற்குத் தனது தும்பிக்கையால் அமைதியாக ஆசீர்வதிக்கவும் தெரியும், ஆளையே வளைத்து தூக்கி வீசவும் தெரியும். திராவிட இயக்கத்திடம் உண்மை வரலாறு இருக்கிறது. ஆட்சிப் பொறுப்பும் இருக்கிறது. அதனால் அமைதியான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மைகளை வழங்கி வருகிறோம். சீண்ட நினைக்கும் அரசியல் எதிரிகளுக்கு யானை தன் பலம் என்ன என்பதைக் காட்டும்.
வேண்டுமானால், மாநில உரிமைகள் மீட்கப்பட வேண்டுமானால், இந்தியாவின் பன்முகத்தன்மை சிதைந்துவிடாமல் காக்க வேண்டுமானால் நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் நம் பணி முழுமையாகவும் முனைப்புடனும் இருந்திட வேண்டும். இந்தியாவின் மாநிலங்களுக்கு அதிகாரமளிக்கக்கூடிய இந்தியா. இவற்றை மனதில் கொண்டு இந்தியா கூட்டணி இந்தியா முழுவதும் வெற்றி பெற இணைந்திருக்கிறோம். தமிழ்நாட்டில் இந்தியா முழுமையான வெற்றி பெற, தலைவர் கலைஞரை நெஞ்சில் ஏந்தும் ஒவ்வொரு உடன்பிறப்பும் ஓயாது உழைத்திட வேண்டும். அதற்குரிய முதற்கட்டப் பயிற்சி காவிரி டெல்டா மண்டலத்தில் நிறைவேறியுள்ளது என தொண்டர்களுக்கு எழுதியுள்ள மடலில் முதலமைச்சர் கூறியுள்ளார்.
கலைஞர் தந்த பயிற்சியுடன் களத்தில் வெல்வோம்!
– அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
விவரம்: https://t.co/n6nTZAt62V pic.twitter.com/jis89w4v22
— DMK (@arivalayam) July 27, 2023