அமித்ஷா செஞ்சது வருத்தம்..”NDA”கூட்டணியில் தான் இருக்கிறோம் – ஓபிஎஸ் ஸ்பீச்!
கூட்டணி குறித்து அறிவிக்க அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது என்பது எனக்கு வருத்தம் தான் இருக்கிறது என ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள் அரசியல் வட்டாரத்தில் ஒரு பக்கம் எழுந்துள்ளது. ஏற்கனவே, பாஜக -அதிமுக கூட்டணி உறுதி என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த சூழலில், “NDA கூட்டணியில் தொடர்வது குறித்து நாளை முடிவு செய்யப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும், எம்.எல்.ஏ.வுமான வைத்திலிங்கம் நேற்று தெரிவித்து இருந்தார்.
அதன்படி, இன்று மாலை ஓ. பன்னீர்செல்வம் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் ” வருகின்ற 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதனை கவனத்தில் எடுத்துக்கொண்டு இயக்கத்தில் இருக்கும் கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் பலரையும் அழைத்து என்ன மாதிரி முடிவு எடுக்கலாம் என்பதை பேசியிருக்கிறோம்.
இன்னும் நேரடியாக நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு இருக்கும் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரிடம் கருத்து கேட்டுவிட்டு நிலையான முடிவை அறிவிப்போம்” என பேசினார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர் NDA கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம் ” இப்போது தமிழக அரசியல் சூழ்நிலை எப்படி இருக்கிறது என்று எல்லாருக்கும் நன்றாகவே தெரியும். நாங்கள் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் NDA கூட்டணியில் தான் போட்டியிட்டோம். இப்போது நாங்கள் அந்த கூட்டணியில் தான் இருக்கின்றோம்” என பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இரட்டை இலை சின்னத்தை பொறுத்தவரையில், ஈரோடு இடைத்தேர்தலில் தற்காலிமாக வழங்கப்பட்டது. இதன் காரணமாக தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சுயாட்சி சின்னத்தில் போட்டிடவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் எனக்கு இரண்டாவது இடம் கொடுத்து தக்க வைத்துக்கொண்டார்கள். என்னை அங்கு தோற்கடிக்க பலரும் செய்த விஷயங்கள் எல்லாருக்குமே தெரியும்.
கூட்டணி குறித்து யார் விரும்புகிறார்கள்..விரும்பவில்லை என்கிற கவலை எங்களுக்கு இல்லை. எங்களுடைய நிலைப்பாட்டை எங்களுடைய கழக நிர்வாகிகளிடம் பேசியிருக்கிறோம். மீண்டும் நாங்களே நேரடியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று அங்கு தொண்டர்களுடைய கருத்து என்ன என்பதை கேட்டுவிட்டு நல்ல முடிவை அறிவிப்போம்” எனவும் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து கூட்டணி குறித்து அறிவிக்கும்போது அமித்ஷா அழைக்காதது குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதில் அளித்த ஓ. பன்னீர்செல்வம் ” கூட்டணி குறித்து அறிவிக்க அமித்ஷா சென்னை வந்தபோது என்னை அழைக்காதது என்பது எனக்கு வருத்தம் தான் இருக்கிறது” எனவும் பதில் அளித்தார்.