அதிமுகவை விமர்சிப்பதை அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும் – ஜெயக்குமார் எச்சரிக்கை

jayakumar

சென்னை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மதுரை மாநாடு, நாடாளுமன்ற தேர்தல், அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மாவட்ட செயலாளர் கூட்டத்துக்கு பிறகு  செய்தியாளர் சந்திப்பில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாடு கண்டதில்லை, இந்திய திருநாடு கண்டதில்லை என்கிற வகையில் மதுரை மாநாடு மகத்தாக அமையப்போகிறது. கழக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் மதுரை மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள். மதுரை மாநாட்டில் உணவு, குடிநீர், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வகையில் இன்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்றார். இதன்பின் ராகுல் காந்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய அவர், நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது. இதுகுறித்து மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மேலும், அதிமுக – பாஜக இடையே ஏற்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய ஜெயக்குமார், அதிமுகவை விமர்சிப்பதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிறுத்தி கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் எதிர் விமர்சனங்களை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்தார். அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று அவருக்கு தெரியும். ஏற்கனவே கூறியது போல, இது போன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு.

செல்லூர் ராஜூவாக இருந்தாலும், அடிமட்ட தொண்டன் உள்ளிட்ட யாராயிருந்தாலும், விமர்சனம் செய்வதே நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை சந்திக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலைமையை ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்