எல்லாம் ரெடி..! டிராகன் விண்கலத்தில் பூமியை நோக்கி புறப்பட்டார் சுக்லா.!
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து AX-4 டிராகன் வெற்றிகரமாக பிரிந்து பூமிக்கு நோக்கி வருகிறது.

வாஷிங்டன் : விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து இன்று சுபான்ஷூ சுக்லா குழுவினர் பூமிக்கு புறப்படுகின்றனர். ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 25ம் தேதி அன்று, சுபான்ஷு சுக்லா மற்றும் மூன்று சர்வதேச விண்வெளி வீரர்களுடன் (பெக்கி விட்சன், ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி-விஸ்னியவ்ஸ்கி, டிபோர் கபு) விண்வெளிக்கு பயணித்தனர்.
இந்தப் பயணம் இந்தியாவின் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இந்தப் பயணம் இந்தியாவின் மனித விண்வெளிப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது. ஏனெனில் சுபான்ஷு சுக்லா 41 ஆண்டுகளுக்குப் பிறகு ISS-இல் பயணித்த முதல் இந்திய விண்வெளி வீரராகவும், ராகேஷ் ஷர்மாவுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியராகவும் ஆனார்.
சுபான்ஷு சுக்லா ISS-ல் சுமார் 20 நாட்கள் தங்கி பல்வேறு அறிவியல் பரிசோதனைகளை மேற்கொண்டார். இதில் இஸ்ரோவால் வடிவமைக்கப்பட்ட 7 பரிசோதனைகள் அடங்கும். தற்போது அவர் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு திரும்புவதற்கான பயணம் துவங்கியது.
விண்வெளி மையத்திலிருந்து பூமி திரும்புவதற்காக சுபான்ஷு சுக்லா, டிராகன் விண்கலத்துக்குள் சென்றார்.
சுபான்ஷு சுக்லாவுடன் மற்ற 3 விண்வெளி வீரர்களும், டிராகன் விண்கலத்துக்குள் நுழைந்தனர். விண்கலம் இந்திய நேரப்படி மாலை 4:15 மணியளவில் ISS-இலிருந்து பிரிக்கப்பட்டு, 4:35 மணிக்கு பூமியை நோக்கி பயணத்தை தொடங்கியது.
சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு, நாளை (ஜூலை 15) மதியம் 3 மணியளவில் கலிபோர்னியாவின் கடற்கரையில் ட்ராகன் விண்கலம் தரையிறங்க திட்டமிடப்பட்டுள்ளது. தரையிறங்கிய பிறகு, சுக்லா பூமியின் ஈர்ப்பு விசைக்கு மீண்டும் பழகுவதற்காக ஒரு வார கால மறுவாழ்வு திட்டத்தில் (ரிஹாபிலிடேஷன்) பங்கேற்பார்.