ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளி விட்ட வழக்கு.., குற்றவாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை.!!
ஓடும் ரயிலில் கர்ப்பிணியை தள்ளிவிட்ட குற்றவாளிக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது.

திருப்பத்தூர் : ஓடும் ரயிலில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரை கீழே தள்ளிய வழக்கில், குற்றவாளியான ஹேமராஜுக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி அன்று கோவை-திருப்பதி இன்டர்சிட்டி ரயிலில் நடந்தது.
ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த 4 மாத கர்ப்பிணிப் பெண், திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் பயணித்தார்.மகளிர் பெட்டியில் யாரும் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, ஹேமராஜ் என்ற இளைஞர் அவருக்கு பாலியல் தொல்லை அளித்திருக்கிறார்.
அப்போது, அந்த கர்ப்பிணிப் பெண் கூச்சலிட்டதால் ஆத்திரமடைந்த அவர், அவரது வலது கையை உடைத்து, ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டார். இதனால், பெண்ணுக்கு தலை, கை, கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டு, கரு கலைந்தது.
இந்தச் சம்பவத்தில் ஹேமராஜ் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி மீனாகுமாரி, ஹேமராஜை குற்றவாளி என கடந்த ஜூலை 11ம் தேதி அன்று தீர்ப்பளித்தார். இன்று (ஜூலை 14) அவருக்கு தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
அதன்படி, கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ரயிலில் இருந்து தள்ளிவிட்ட ஹேமராஜ்க்கு 3 ஆயுள் தண்டனை, சாகும் வரை கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு மத்திய அரசு ரூ.50 லட்சம், மாநில அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு தர திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி உத்தரவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, வழக்கு தொடரப்பட்டு 32 நாட்களில் தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழ்நாடு காவல்துறையில் 33 உயரதிகாரிகள் பணியிட மாற்றம்.!
July 14, 2025