நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்! – முதலமைச்சர் ஸ்டாலின்

mk stalin

மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் விதமாக டெல்லி நிர்வாக மசோதாவானது கடந்த வாரம் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து, நேற்று மாநிலங்களைவையில் டெல்லி நிர்வாக மசோதா தாக்கல் செய்யப்பட்டு, மசோதா மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது.

இந்த மசோதா மீது நேற்று சுமார் 8 மணிநேரம் விவாதம் நடைபெற்றது. ஆம், ஆத்மி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும், டெல்லி நிர்வாக மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 237 மாநிலங்களவை உறுப்பினர்களில் 131 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர். 102 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் மாநிலங்களவையிலும் டெல்லி நிர்வாக மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள்  மத்திய அரசை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் டெல்லி நிர்வாக மசோதா தொடர்பாக பதிவிட்டுள்ளார். அதில், தலைநகர் டெல்லியை ஒரு மாநகராட்சியைப் போலத் தரம் குறைக்கும் டெல்லி சர்வீசஸ் பில் மாநிலங்களவையில் நிறைவேறிய நேற்றைய நாள், மக்களாட்சியின் கறுப்பு நாள்.

எதிர்க்கட்சி ஆட்சி செய்தால் அந்த மாநிலத்தைக் கூடச் சிதைப்போம் என்ற பாஜகவின் பாசிசம் அரங்கேறிய நாளை வேறு என்ன சொல்வது?, 29 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு நாட்டின் தலைநகரையே தரைமட்டத்துக்குக் குறைத்த சதிச் செயலுக்கான தண்டனையை டெல்லி மாநில மக்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரைவில் தருவார்கள். மூன்று மாதமாக மணிப்பூர் எரிகிறது. அதை அணைக்க முடியாமல், டெல்லியைச் சிதைக்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் தந்திரங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மாநில முதலமைச்சரின் அதிகாரத்தைக் குலைக்கும் இந்த மசோதாவை, பேரறிஞர் அண்ணாவின் பெயரால் கட்சி நடத்தும் அடிமைக் கூட்டம் ஆதரித்து மாநிலங்களவையில் வாக்களித்திருப்பது எனக்கு அதிர்ச்சியளிக்கவில்லை. “நான் யாருக்கும் அடிமையில்லை” என்றபடியே, பா.ஜ.க.வின் பாதம் தாங்கி, “கொத்தடிமையாக” தரையில் ஊர்ந்து கொண்டிருக்கிறார் பழனிசாமி என்பதையே இது வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தனது பதவியில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்