கோர விபத்து…வேன் மீது மோதிய ஆம்னி பேருந்து..4 பேர் பலி!!
பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற பேருந்து, கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மீது மோதியது

கரூர் : மாவட்டம், செம்மடை அருகே நடந்த பயங்கர விபத்தில், 4 பேர் உயிரிழந்த சம்பவம் காலையிலே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பேருந்து ஒன்று சாலையின் நடு எல்லையை தாண்டி எதிர்திசையில் வந்த சுற்றுலா வேன் மீது மோதியதில், சிறுவன், சிறுமி, வேன் ஓட்டுநர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.
மேலும், 11 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து, பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற ஆம்னி பேருந்து, கோவில்பட்டியில் இருந்து வந்த சுற்றுலா வேன் மற்றும் ஒரு டிராக்டர் டிப்பர் ஆகியவற்றுடன் மோதியதால் ஏற்பட்டது.
பெங்களூருவில் இருந்து நாகர்கோவிலுக்கு பயணிகளை ஏற்றிச் சென்ற ஆம்னி பேருந்து, அதிக வேகத்தில் சென்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இதே நேரத்தில், கோவில்பட்டியில் இருந்து எதிர்திசையில் வந்த சுற்றுலா வேன், சில பயணிகளுடன் பயணித்து வந்தது. முதலில், ஆம்னி பேருந்து அருகில் சென்று கொண்டிருந்த டிராக்டர் டிப்பர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது.
இந்த மோதலின் காரணமாக, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவரம்பைத் தாண்டி எதிர்திசையில் பாய்ந்தது. இதனால், எதிரே வந்த சுற்றுலா வேன் மீது பலமாக மோதியது. மேலும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆம்னி பேருந்தில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்களின்றி தப்பினர், ஆனால் சிலர் மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன், உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.