குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து…எப்படி 50 தொகுதிகளை ஜெயிப்பாங்க? ராமதாஸை விமர்சித்த சேகர் பாபு!
படுத்துக்கொண்டே 50 தொகுதிகளை ஜெயிக்கும் என்ற ராமதாஸ் கருத்தை அமைச்சர் சேகர்பாபு விமர்சித்து பேசியுள்ளார்.

சென்னை : நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் மாவட்ட தலைவர்கள் மற்றும் செயலாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அன்புமணி கூட்டத்தில் பங்கேற்காத நிலையில், பல மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்கவில்லை என்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகவும் மாறியது.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சி நிறுவனர் ராமதாஸ் ” கட்சி வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடக்கிறது. கூட்டத்திற்கு சிலர் வரவில்லை என்பதை பார்த்திருப்பீர்கள். மாநாட்டுக் களைப்பில் இருப்பதால் சிலர் கூட்டத்திற்கு வரவில்லை” என விளக்கம் அளித்தார்.
அது மட்டுமின்றி, 50 தொகுதிகளில் படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கான வித்தைகளை சொல்லிக்கொடுத்தேன் 50 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளை பரிமாறிக்கொள்வதற்கான கூட்டம் இது செயல்பட முடியவில்லை என யாரும் விருப்பம் தெரிவித்தால், விரும்பியபடி மாற்றப்படுவார்கள் எனவும் பேசியிருந்தார்.
இதனையடுத்து, பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அமைச்சர் சேகர்பாபுவிடம் இது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் “எல்லாரும் அரசியல் ரீதியாக பேசும்படி தான் அவரும் பேசியிருக்கிறார். அவர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று சொன்னார். ஆனால், முதலில் அவருடைய பிரச்சினைகளை தீர்த்துவிட்டு அதன்பிறகு வெற்றி தோல்வியை பற்றி நிர்ணயிக்க வேண்டும்.
அதன்பிறகு தான் வெற்றி தோல்வி குறித்து தன்னுடைய கருத்தை அவர் சொல்லவேண்டும். அவர்கள் குடும்பத்துக்குள்ளேயே வெட்டு குத்து நடந்து கொண்டு இருக்கிறது. இந்த சூழலில் இவர்கள் எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிப்பார்கள்.? அப்படியென்றால் பார்த்துகொள்ளுங்கள் மக்களின் மீது நாட்டம் இல்லாதவர்கள் மக்களை பற்றி கவலை படாதவர்கள் தான் இப்படி சொல்வார்கள். அவருடைய கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை” எனவும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.