Luna 25 crashes:லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியது – ரோஸ்கோஸ்மோஸ்

புதுடெல்லி: ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுப்பாதையில் சுழன்று நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது .
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தை போலவே, ரஷ்யாவும் நிலவின் தென் துருவத்திற்கு விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி, லூனா-25 எனும் விண்கலத்தை கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி விண்ணில் செலுத்தியது. லூனா-25 விண்கலமானது, சந்திரனின் தென் துருவத்தில் ஒரு வருடம் செயல்படும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. நிலவின் தென் துருவத்தில் நீர் உள்ளதா உள்ளிட்ட முக்கிய ஆய்வுக்காக ரஷ்யா லூனா-25ஐ விண்ணில் செலுத்தியது.
விண்ணில் செலுத்தப்பட்ட லூனா-25யானது, வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி நிலவில் தரையிறங்கும் எனவும் திட்டமிடப்பட்டது. இதற்கிடையில், கடந்த 17-ந்தேதி லூனா-25 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. இதன்பிறகு நிலவின் சுற்றுவட்டப்பதையைக் குறைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், லூனா -25 விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதிக்கட்ட சுற்று வட்டபாதையை குறைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுற்றுப்பாதையை குறைப்பதில் திடீர் சிக்கல் ஏற்பட்டது.
இந்த அவசர நிலைமையை ஆராய்ந்து வருவதாகவும், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்திருந்த நிலையில் லூனா-25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.