பூனையை பார்த்துக்கோங்க என்னோட சொத்து உங்களுக்கு…ஆஃபர் கொடுத்த சீனா தாத்தா!
தான் இறந்த பிறகு தனது பூனையை பராமரித்து கொள்ளும் நபருக்கு சொத்துக்கள் முழுவதையும் அளிக்க விரும்புவதாக 82 வயதான சீனாவை சேர்ந்த முதியவர் அறிவித்துள்ளார்.

குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு பூனையான சியான்பாவை பராமரிக்கும் நபருக்கு தனது முழு சொத்தையும், அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் சேமிப்பு உட்பட, அளிக்க விரும்புவதாக அறிவித்துள்ளார். இந்த செய்தி, கடந்த ஜூலை 3-ஆம் தேதி South China Morning Post இதழில் வெளியாகி உலக அளவில் ட்ரென்டிங் செய்தியாகவும் மாறியுள்ளது. குழந்தைகள் இல்லாத லாங், தனது மனைவி இறந்து பத்து ஆண்டுகளுக்கு பிறகு தனிமையில் வாழ்ந்து வருகிறார்.
எனவே, மழைக்காலத்தில் தெருவில் அலைந்து திரிந்த சியான்பா மற்றும் அதன் மூன்று குட்டிகளை தத்தெடுத்து தன்னுடைய பிள்ளைகளை போல வளர்த்து வந்தார். தற்போது, சியான்பாவை தவிர மற்ற மூன்று பூனைகளும் இறந்துவிட்ட நிலையில், இந்த பூனையின் எதிர்காலத்தை உறுதி செய்ய லாங் தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக பூனையை பார்த்துகொள்வோருக்கு தனது சொத்து என அறிவித்துள்ளார்.
குவாங்டாங் ரேடியோ மற்றும் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் லாங் இது குறித்து பேசும்போது “சியான்பாவை நல்ல முறையில் பராமரிக்க ஒரு நபரை கண்டறிய விரும்புகிறேன். அவருக்கு எனது முழு சொத்தையும், என் வீடு மற்றும் சேமிப்பையும் வழங்குவேன்,” என்று தெரிவித்தார்.இந்த அசாதாரண முடிவு, பூனை மீதான அவரது அளவற்ற அன்பையும், அதன் நலனை உறுதி செய்யும் அக்கறையையும் அவருடைய மனதில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை காண்பிக்கிறது.
இருப்பினும் யார் இந்த பூனையை பார்த்துக்கொள்ள ஆள் கிடைக்கவில்லை. தாத்தா கொடுத்துள்ள இந்த அறிவிப்பை பார்த்த பலரும் இந்த முதியவரின் நிபந்தனைகள் மிகவும் கடுமையாக இருக்கலாம், அதனால் தான் யாரும் முன்வரவில்லை எனவும், லாங் தனது சொத்தை வழங்க விரும்பினாலும், அவரது உறவினர்கள் இதை சட்டரீதியாக எதிர்க்கலாம் என்றும், சிலர் பணம் இல்லாமலேயே சியான்பாவை தத்தெடுக்க தயாராக இருப்பதாகவும், பூனைகளை உண்மையாக நேசிப்பவர்கள் இதை ஒரு வாய்ப்பாக கருத மாட்டார்கள் என்றும் பேசி வருகிறார்கள்.
மேலும், இதற்கு முன்பு, ஷாங்காயைச் சேர்ந்த ஒரு முதிய பெண்மணி, தனது குழந்தைகள் தன்னை புறக்கணித்ததால், 2.8 மில்லியன் டாலர் சொத்தை தனது செல்லப்பிராணிகளுக்கு வழங்க முடிவு செய்தார். அவரை தொடர்ந்து இப்போது சீனாவை சேர்ந்த இந்த முதிய நபர் தன்னுடைய பூனையை பார்த்து கொள்பவருக்கு சொத்து என அறிவித்துள்ளது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.