லக்கி பாஸ்கர் 2 நிச்சயம் வரும்… உறுதி கொடுத்த இயக்குநர் வெங்கி அட்லூரி!
லக்கி பாஸ்கர் 2 நிச்சயமாக வரும் ஆனால், கொஞ்சம் நேரம் ஆகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உறுதியாக உருவாகும் என இயக்குநர் வெங்கி அட்லூரி அறிவித்தார். ஜூலை 6, 2025 அன்று ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இந்த விஷயத்தை அறிவித்தார். இந்த அறிவிப்பு, முதல் பாகத்தின் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்கி பாஸ்கர்’ திரைப்படம், அதன் தனித்துவமான கதைக்களம் மற்றும் துல்கரின் நடிப்பால் தென்னிந்திய திரையுலகில் பரவலான பாராட்டுகளைப் பெற்றிருந்தது.வெங்கி அட்லூரி, தற்போதைய திட்டங்கள் குறித்து பேசுகையில், “நானும் துல்கர் சல்மானும் எங்களுடைய மற்ற திரைப்படங்களில் பிசியாக உள்ளோம். ‘லக்கி பாஸ்கர் 2’ எடுக்க சிறிது காலம் தேவைப்படும், ஆனால் இந்தப் படம் நிச்சயமாக வரும்,” என்று உறுதியளித்தார். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாம் பாகத்திற்கு கதை மற்றும் திரைக்கதை உருவாக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திரைப்படம், முதல் பாகத்தின் கதையைத் தொடர்ந்து மேலும் புதிய திருப்பங்களுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘லக்கி பாஸ்கர்’ முதல் பாகம், ஒரு சாமானிய மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் நிதி சவால்கள் மற்றும் அவர் எதிர்கொள்ளும் மாற்றங்களை உணர்ச்சிபூர்வமாக சித்தரித்து, பார்வையாளர்களை கவர்ந்தது .துல்கர் சல்மானின் இயல்பான நடிப்பும், வெங்கி அட்லூரியின் இயக்கமும் படத்திற்கு பலம் சேர்த்தன. இரண்டாம் பாகத்தில், இதே கதாபாத்திரங்களை வைத்து கதை நகரும் என கூறப்படுகிறது.
மேலும், படத்தில் புதிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் இணைவது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த அறிவிப்பு, தமிழ், தெலுங்கு, மற்றும் மலையாள ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ‘லக்கி பாஸ்கர் 2’ படத்தின் புரொடக்ஷன் பணிகள் எப்போது தொடங்கும், எப்போது வெளியாகும் என்பது குறித்து இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை வருகின்ற மாதங்களில் அதற்கான அறிவிப்புகளும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.