Seeman: நடிகை விஜயலட்சுமி அளித்த புகார்.! ஆஜராகாத சீமான்.. வழக்கறிஞர்கள் விளக்கம்.!

நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை வலசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதனால் அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை செயலர் சங்கர் தலைமையில் வழக்கறிஞர் குழுவினர் காவல் நிலையத்தில்ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று ஆஜராவார் என முன்னதாக கூறப்பட்டிருந்தது. திருமணம் செய்துகொள்வதாக கூறி சீமான் மோசடி செய்ததாக நடிகை விஜய லட்சுமி அளித்த புகாரில் சீமானுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், நடிகை விஜய லட்சுமி தொடர்ந்த வழக்கில் சீமான் ஆஜராகாமல், அவரது வழக்கறிஞர்கள் ஆஜராகி காவல் துணை ஆணையிரிடம் விளக்கமளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான் வழக்கறிஞர் குழு, சில பல காரணங்களால் சீமான் போலீசில் ஆஜராகவில்லை. சீமானின் இரு கடிதங்கள் போலீசாரிடம் வழங்கியுள்ளோம். 2011-ல் வாபஸ் பெற்ற வழக்கின் தொடர்ச்சியா என கேட்டு போலீஸுக்கு சீமான் கடிதம் எழுதியுள்ளார். 2011ல் முடிக்கப்பட்ட வழக்கின் தொடர்ச்சியாக சீமானிடம் விசாரணையா என நாங்கள் கேட்டுள்ளோம்.
புகார் அளித்தவரே வழக்கை திரும்ப பெற்றதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது. ஆனால், சம்பவம் நடந்ததாக கூறும் 2008க்கு பிறகு 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு புகார் மனுவை நடிகை விஜய லட்சுமி கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ளார். அது மனு மீது தற்போது விசாரணைக்கு வந்துள்ளது. சீமான் மீது புதிய வழக்கு பதிந்து விசாரணையா? என கேள்வி எழுப்பியுள்ளோம். 13 ஆண்டுக்குப் பின் விசாரணையை தொடங்க நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டதா? எனவும் கேள்வி எழுப்பினர்.
2011ல் முடித்து வைக்கப்பட்ட வழக்கு தான் மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளதா அல்லது தற்போது புகார் அளித்துள்ள மனுவில் வேறொரு புகார் குறித்து விசாரணை நடைபெறுகிறதா என்பது குறித்து எங்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது என தெரிவித்தனர். தனது சந்தேகத்துக்கு போலீஸ் தரப்பு விளக்கம் அளித்த பிறகு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என கடிதத்தில் சீமான் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.
அதாவது, சந்தேகத்துக்கு போலீஸ் பதில் தந்தால் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என சீமான் தரப்பு தெரிவித்துள்ளனர். மேலும், சீமான் ஆஜராகாத நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து போலீசார் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.