Asia Cup 2023 : பாகிஸ்தான் அணி எடுத்த அதே 252 ரன்களை எடுத்து இலங்கை வென்றது எப்படி.?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாச மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளுக்கும் இறுதி போட்டிக்குள் நுழைவதற்கு மிக முக்கியமான போட்டி என்பதால் ஆட்டம் ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் வீரர்கள் விறுவிறுப்பாக களமிறங்கும் முன்னரே மழை களமிறங்கி ஆட்டத்திற்கு தடை போட்டது. முதன் முறையாக 45 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டு பின்பு 42 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமான் 4 ரன்களுக்கு ஆட்டமிழக்க மற்றொரு புறம் அப்துல்லா ஷபீக் நிதானமாக விளையாடி 52 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார் .கேப்டன் பாபர் அசாம் தனது பங்கிற்கு 29 ரன்கள் எடுத்து வெளியேற ரிஸ்வான் அதிரடியாக விளையாடி 86 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆனால் இலங்கை அணி பாகிஸ்தான் அணி எடுத்த அதே 252 ரன்களை 42 ஓவர்களில் எடுத்து வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. அதாவது, ஆட்டம் முதலில் மழை காரணமாக 45 ஓவர்களாக மாற்றப்பட்டு ஆட்டம் தொடங்கியது. அப்போது 27.4 ஓவர் இருக்கும் போது பாகிஸ்தான் அணி 130 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து இருந்த சமயத்தில் மீண்டும் மழை பெய்தது.
இதனை அடுத்து, 45 நிமிடங்கள் ஆட்டம் தடைபட்ட காரணத்தால் ஓவர்கள் 42ஆக குறைக்கப்பட்டது. அதற்கடுத்து தான் 42 ஓவரில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து இருந்தனர். இதன் காரணமாக தான் 42 ஓவர்களில் 253 ரன்கள் எடுக்க வேண்டியதில் இருந்து ஒரு ரன் குறைக்கப்பட்டு 252 ரன்கள் எடுக்க வேண்டும் என கூறப்பட்டது.
அதன் பிறகு 42 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பதும் நிஸ்ஸங்க(29), குசல் பெரேரா(17) ஆகியோர் ஆட்டமிழக்க குசல் மெண்டிஸ் அதிரடியாக விளையாடி 91 ரன்களை எடுத்தார்.சதீர சமரவிக்ரம(48), சரித் அசலங்கா49 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார் இறுதியில் இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.
இறுதி போட்டியானது கொழும்பு மைதானத்தில் வரும் 17ஆம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது இதில் இந்தியாவை எதிர்கொள்கிறது இலங்கை அணி. இதற்கிடையில் இன்று இந்திய அணி வங்கதேசத்தை ‘சூப்பர் 4’ சுற்றில் எதிர்கொள்கிறது. ஏற்கனவே இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டதால் இன்றைய போட்டியின் வெற்றி தோல்வி இந்திய அணியை பாதிக்காது.