WhatsApp Business: வாட்ஸ்அப் பிசினஸுக்கான புதிய அம்சங்களை வெளியிட்ட மெட்டா..! என்னென்ன இருக்கு தெரியுமா.?

WhatsappMessageEdit

மெட்டாவின் வாட்ஸ்அப் ஆனது பயனர்களின் எதிர்பார்ப்பைப் புரிந்துகொண்டு அவ்வப்போது பல புதுப்புது அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் கூட வாட்ஸ்அப் சேனல்கள் என்ற புதிய ஒளிபரப்பு அம்சத்தை இந்தியா உட்பட 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியிட்டது.

இதனைத்தொடர்ந்து, தற்போது வாட்ஸ்அப் பிசினஸுக்கான பல மேம்படுத்தப்பட்ட அம்சங்களை, மெட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் அறிவித்துள்ளார். மும்பையில் உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் வாட்ஸ்அப் வணிகத்தை மையமாகக் கொண்ட மெட்டா உரையாடல் நிகழ்வின் போது ஜுக்கர்பெர்க் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பில் மூன்று முக்கிய அம்சங்கள் உள்ளன. அதில் வாட்ஸ்அப் ஃப்ளோஸ், ரேஸர்பே மற்றும் பேயுவுடன் இணைந்த வேகமான கட்டண முறை மற்றும் வணிகர்களுக்கான மெட்டா வெரிஃபைட் போன்றவை அடங்கும்.

வாட்ஸ்அப் ஃப்ளோஸ்:

இந்த வாட்ஸ்அப் ஃப்ளோக்கள் மூலம் வாட்ஸ்அப் சேட் மூலமாக விட்டு வெளியேறாமல் உங்கள் ரயில் இருக்கையை விரைவாகத் தேர்ந்தெடுத்து பதிவு செய்யலாம். பயனர்களின் ஷாப்பிங் அனுபவத்தை மேம்படுத்த உணவை ஆர்டர் செய்து கொள்ளுதல், ஒருவரின் நீங்கள் எங்கே சந்திக்க போகிறீர்கள் என்பதை முன்பதிவு செய்தல் போன்றவற்றையும் செய்ய முடியும். இந்த அம்சம் வரும் வாரங்களில் வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்ம் மூலம் உலகெங்கிலும் கிடைக்கும் என்று வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

வேகமான கட்டண முறை:

வாட்ஸ்அப் மூலமாக நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு வங்கியில் இருந்து பணம் செலுத்தும் அம்சமானது ஏற்கனவே உள்ளது. அதை இன்னும் மேம்படுத்தும் விதமாக, வாட்ஸ்அப்பில் ஷாப்பிங் செய்து அதற்கான பணத்தை வாட்ஸ்அப் வழியாகவே செலுத்தும் அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அம்சம் மூலம் இந்தியாவில் உள்ளவர்கள் தாங்கள் வாங்கும் பொருள்களுக்கு கிரெடிட் கார்டு மற்றும் கூகுள்பே போன்ற பிற யூபிஐ பயன்பாடுகள் மூலமாக, மெசேஜில் பணம் செலுத்த முடியும். இதனால் நீங்கள் வெளியே எங்கும் செல்லவேண்டிய தேவை இருக்காது.

பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்ட ரேஸர்பே (Razorpay) மற்றும் பேயு (PayU) உடன் இணைந்து கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள், நெட் பேங்கிங் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள்பே போன்ற பிற யூபிஐ பயன்பாடுகள் மூலமாக இனி எளிதாக பணம் செலுத்திக் கொள்ளலாம்.

மெட்டா வெரிஃபைட்:

வாட்ஸ்அப் பிசினஸில் வணிகர்களுக்காக மெட்டா வெரிஃபைட் பேட்ஜ் ஆனது அறிமுகமாகவுள்ளது. இதனால் நீங்கள் ஒரு பொருளை வாங்கும் வணிகர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா அல்லது ஆள்மாறாட்டம் செய்கிறாரா என்பதை அறிந்து கொள்ள முடியும். மெட்டா வெரிஃபைட் ஆனது தனிப்பயன் கொண்ட வாட்ஸ்அப் பக்கத்தை உருவாக்கும் திறன் உள்ளிட்ட கூடுதல் பிரீமியம் அம்சங்களுடன் வருகிறது.

அதோடு ஆர்வமுள்ள பயனர்கள் உங்களது வணிகத்தை இணையத்தில் தேடும்பொழுது எளிதாகக் கண்டறிய முடியும். பல சாதனத்தில் உங்கள் கணக்கை வைத்திருப்பதன் மூலம் நிறைய வாடிக்கையாளர்களுக்கு பதிலளிக்க முடியும். இந்த மெட்டா வெரிஃபைட் பெற்ற வணிகர்கள் தங்களது கணக்கை 10 சாதனங்களில் வைத்துக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் பிசினஸ் செயலியைப் பயன்படுத்தி சிறு வணிகர்களுடன் கூடிய விரைவில் மெட்டா வெரிஃபைட் சோதனையைத் தொடங்க உள்ளதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது. எதிர்காலத்தில், வாட்ஸ்அப் பிசினஸ் பிளாட்ஃபார்மில் உள்ள வணிகர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்