அக்.1 முதல் 6 மாதங்கள்.. மணிப்பூர் மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிப்பு!

மணிப்பூர் மாநிலம் 6 மாதங்களுக்கு பதற்றம் நிறைந்த மாநிலமாகவே கருதப்படும் என்று அம்மாநில ஆளுநர் அறிவித்துள்ளார். மணிப்பூர் கடந்த மே மாதம் முதல் இரு சமூத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக உருவெடுத்து நாட்டையே உலுக்கியது. அதிலும், இரு பெண்களுக்கு ஒரு கொடூர கும்பலால் நேர்ந்த துயரம் பலரது இதயத்தை நொறுக்கியது. இந்த கலவரமானது, மைத்தேயி இன மக்கள் தங்களை பழங்குடி இன பிரிவில் சேர்க்க கோரியபோது, அதற்கு பழங்குடியின மக்களான குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாதால் தொடங்கியது.
இந்த மோதல் பல மாதங்களாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதில், இரு பக்கமும் உயிர்சேதங்கள் ஏற்பட்டாலும் குக்கி இன மக்களுக்கு அதிக அளவில் உயிர்சேதங்கள் ஏற்பட்டன. 130க்கும் அதிகமானோர் இந்த கலவரத்தில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. கலவரத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் இன்னும் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் இன்னும் மணிப்பூர் இயல்பு நிலைக்கு திரும்பாமல் தான் இருந்து வருகிறது.
இருப்பினும், பாதுக்காப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதால், அங்கு முன்பு அரங்கேறியது போல பெரிய கலவரங்கள், உயிர்சேதங்கள் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வருகின்றன. அப்படி இருந்து, சமீபத்தில் மணிப்பூரில் மைத்தேயி இனக் குழுவை சேர்ந்த 2 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இந்த 2 மாணவர்களும் சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருந்தது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக கூறப்பட்டாலும், மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது.
இதனிடையே, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஆளும் மாநில பாஜக அரசும் மத்தியில் ஆளும் பாஜக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முடக்கி இருந்தன. மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக உச்சநீதிமன்றமும் தலையிட்டு, குழுக்கள் அமைக்கப்பட்டன.
மணிப்பூர் வன்முறை சம்பவங்கள் குறித்து சிபிஐ குழு விசாரணை நடத்துகிறது. இந்த நிலையில், மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக அம்மாநில உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இம்பால், லாம்பல், சிங்ஜமேய் உள்பட 19 காவல் நிலைய எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகள் பதற்றமானவையாக என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் 6 மாதங்களுக்கு இந்த அறிவிப்பு அமலில் இருக்கும் என மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த சில மாதங்களாக வன்முறை கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசின் நிர்வாகத்துக்கு உதவியாக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடும் தீவிரவாத, பிரிவினைவாத குழுக்களுக்கு எதிராக ராணுவத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது என அம்மாநில ஆளுநர் அறிக்கை வாயிலாக கூறியுள்ளார்.