ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!
ரெட்ரோ படத்தின் சண்டைக்காட்சிகள் இளைஞர்களுக்கு பிடித்துள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி உழைப்பாளர் தினத்தன்று வெளியான திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக நல்ல வசூலை ஈட்டி கிட்டத்தட்ட வசூல் ரீதியாக ஒரு சுமாரான வெற்றி படமாக மாறியுள்ளது.
இருப்பினும் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன், கங்குவா ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. அந்த வரிசையில் ரெட்ரோ படம் இணையாது வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமர்சன ரீதியாக வெற்றிபெற தவறிவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இந்த விமர்சனங்கள் குறித்து படக்குழு தரப்பில் இதுவரை யாரும் பேசாமல் இருந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இது குறித்து பேசியுள்ளார்.
இது குறித்து அந்த பேட்டியில் பேசிய அவர் ” நான் பொதுவாகவே ரெட்ரோ படம் குறித்து ஆன்லைனில் வந்த விமர்சனங்களை பார்க்கவில்லை. ஏனென்றால், அப்படி பார்க்கும் விமர்சனங்களை விட நேரில் அவர்களுடன் அமர்ந்து படம் பார்த்துவிட்டு அவர்கள் சொல்லு விமர்சனங்களை தான் கேட்க தோன்றும். அது வேறு உலகமாகவும், இது வேறு உலகமாகவும் எனக்கு பார்க்க தோன்றுகிறது.
இரண்டுக்கும் எனக்கு தெரிந்து வித்யாசம் நிறையவே இருக்கிறது. எனவே, நான் ஆன்லைனில் சொல்லப்படும் விமர்சனங்களை பார்க்கவே கூடாது என நினைக்கிறேன். திரையரங்குகளுக்கு ஒருவர் நேரில் வந்து படத்தை பார்த்துவிட்டு அவர்கள் சொல்லும் விமர்சனங்களை கேட்க தான் விரும்புகிறேன். இருப்பினும் விமர்சனங்களை வைத்து பார்க்கையில் நான் எதிர்மறையான விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன்.
அதே சமயம் இளைஞர்கள் பலருக்கும் படம் பிடித்திருக்கிறது என்பதையும் அறிந்துகொண்டேன். ஏனென்றால், படத்தை பார்த்துவிட்டு அவர்கள் ஸ்டண்ட் காட்சிகள் பிடித்திருப்பதாக தெரிவித்திருந்தார்கள். எனவே, எனக்கு அதனை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது” எனவும் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.