பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்ட 9 பேருக்கான தண்டனை விவரம் 12 மணிக்கு அறிவிக்கப்படும் என அரசு வழக்கறிஞர் சுந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் இதில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என செய்திகள் தெரிவித்தன. சமூக வலைதளங்கள் மூலம் பெண்களை ஏமாற்றி, ஒரு கும்பல் அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அதை வீடியோவாக பதிவு செய்த கொடூரம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்த பொள்ளாச்சி வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக 2019-ல் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. அதன்பிராகி, 2021-ல் மேலும் ஹெரோன் பால், பைக் பாபு எனப்படும் பாபு, அருளானந்தம், மற்றும் அருண்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் உள்ளனர். இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி ஆர். நந்தினி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வந்தது. இரு தரப்பு வாதங்கள் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில், நீதிபதி நந்தினி இந்த பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பை மே 13, 2025 அன்று வழங்க உள்ளதாக முன்னதாக அறிவித்திருந்தார்.
எனவே, இந்த வழக்கில் என்ன தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது என கேள்விகள் எழும்பி கொண்டிருந்த நிலையில், இன்று காலையில் கைது செய்யபட்ட அந்த 9 பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் செய்தனர். கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார்.
அதன்படி, கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்படும் என வாதிட்டதாகவும் நீதிமன்றம் அதன்படி தண்டனை விவரங்கள் வழங்கும் எனவும் இன்று மதியம் 12 மணிக்கு அதற்கான விவரங்களை வழங்கும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்திரமோகன் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அவர் ” கைது செய்யப்பட்ட அந்த 9 குற்றவாளிகளும் தங்களுடைய அம்மாவிற்கு வயதாகிவிட்டது…வீட்டிற்கு ஒரே பிள்ளை என்பது போல பேசினார்கள். ஆனால், உச்சபட்ச தண்டனையாக அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை கொடுக்கவேண்டும் என நாங்கள் வாதங்களை வைத்துள்ளோம். எனவே, எங்களுடைய கோரிக்கைகளை அரசு ஏற்று நல்ல தண்டனை விவரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம்” எனவும் சுந்திரமோகன் தெரிவித்தார்.