காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..குழந்தைகள் உள்பட 84 பேர் பலி!
காசா மீது இஸ்ரேல் மீண்டும் வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது மீண்டும் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில் 1,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மற்றும் அமெரிக்க குடிமக்களை ஹமாஸ் பணயக்கைதிகளாக பிடித்துச் சென்றது.
இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் ஹமாஸை குறிவைத்து காசா மீது தொடர் தாக்குதல்களை தொடங்கியது. இந்த மோதலில், காசாவில் 52,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், இதனால் மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் தொடர்ந்தது. 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்த இந்த போர், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மத்தியஸ்தத்தால் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வழிவகுத்தது.
இருப்பினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த போரை நிறுத்த எந்த வாய்ப்பும் இல்லை என திட்டவட்டமாக கூறியுள்ளார். இதனால், தொடர்ச்சியாக தாக்குதல் நடைபெற்று காசாவில் கடுமையான உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் உயிருக்குப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனென்றால், கடந்த மார்ச் 2, முதல் இஸ்ரேல் காசாவிற்கு அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளின் நுழைவை தடை செய்துள்ளது. இதனால், உணவு, மருத்துவப் பொருட்கள், எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்றவற்றின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இந்த சூழலில், இன்று காசா பகுதியில் இஸ்ரேல் மீண்டும் நடத்திய வான்வழி தாக்குதல்களில் குழந்தைகள் உள்பட 84 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல இடங்களை இலக்காகக் கொண்டு இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் காசாவின் தெய்ர் அல்-பலாஹ், பெய்ட் லஹியா உள்ளிட்ட பகுதிகளில் நடந்துள்ளன. அகதிகள் முகாம்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களை இலக்காக வைத்து இந்த தாக்குதல் நடந்துள்ளது. பாலஸ்தீன சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, இந்த தாக்குதல்களில் 84 பேர் கொல்லப்பட்டனர், இதில் பல குழந்தைகள் அடங்குவர். மேலும், பலர் காயமடைந்துள்ளனர், மற்றும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கிறது.