மஹிசாகர் ஆற்றில் பாலம் இடிந்து வாகனங்கள் விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு.!
வதோதரா மற்றும் ஆனந்த் நகரங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது உள்ள காம்பிரா பாலம் பத்ராவில் இடிந்து விழுந்தது.

குஜராத் : பாலம் ஒன்று திடீரென உடைந்து விழுந்ததில், 2 லாரிகள் மற்றும் 4 வாகனங்கள் ஆற்றில் விழுந்த சம்பவம் குஜராத்தின் வதோதராவில் நிகழ்ந்துள்ளது. இன்று காலை 7.30 மணியளவில் 40 வருடங்கள் பழமையான பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் பல வாகனங்கள் ஆற்றில் விழுந்தன.
இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், மீட்புப்பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எதனால் பாலம் திடீரென உடைந்து விழுந்தது என அதிகாரிகள் விசாரித்து வரும் நிலையில், மேலும் பலி எண்ணிக்கை உயரலாம் என அஞ்சப்படுகிறது.
900 மீட்டர் நீளமுள்ள இந்த கம்பீரா பாலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் குறித்து செய்தியாளர் சந்தித்து பேசிய குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் , ”மஹிசாகர் ஆற்றின் மீது உள்ள காம்பிரா பாலத்தின் ஒரு பலகை இடிந்து விழுந்ததில் ஐந்து முதல் ஆறு வாகனங்கள் ஆற்றில் விழுந்ததாக தெரிவித்தார். இதில், மூன்று பேர் இறந்துள்ளதாகவும், ஐந்து பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்றும், அதன் பழுது மற்றும் பராமரிப்பு பணிகள் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். இந்த விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரிக்கப்படும் என்றும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காரணங்களை விசாரிக்க தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்ப முதல்வர் பூபேந்திர படேல் உத்தரவிட்டுள்ளார் என்றார்.