ஆய்வில் அதிர்ச்சி : “குழந்தைகளுக்கு செல்போன் கொடுக்காதீங்க” எய்ம்ஸ் மருத்துவமனை எச்சரிக்கை!

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 2.2 மணிநேரத்தை போன், தொலைக்காட்சி, லேப்டாப்களில் செலவிடுவதாக, எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர்.

children use mobile phone

டெல்லி : எய்ம்ஸ் ராய்ப்பூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களான டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே மற்றும் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் ஆகியோர், இந்தியாவில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் சராசரியாக 2.2 மணிநேரம் தொலைக்காட்சி, ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் போன்ற திரைகளில் செலவிடுவதாக அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளனர்.

இந்த ஆய்வு, ‘க்யூரஸ்’ (Cureus) இதழில் வெளியிடப்பட்டது, 2,857 குழந்தைகளை உள்ளடக்கிய 10 ஆய்வுகளின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, இந்த திரைநேரம் உலகளாவிய வழிகாட்டுதல்களை விட இரு மடங்கு அதிகமாக இருப்பதாக எச்சரிக்கிறது. குறிப்பாக, 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தினமும் 1.2 மணிநேரம் திரைகளைப் பயன்படுத்துவது, இந்த வயதினருக்கு திரைநேரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை மீறுவதாக தெரிய வந்துள்ளது.

இது குறித்து டாக்டர் ஆஷிஷ் கோப்ரகடே கூறுகையில், “5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60-70% பேர் ஆரோக்கியமான அளவை விட அதிகமாக திரைகளைப் பயன்படுத்துகின்றனர். இது மொழித் திறன், அறிவாற்றல் வளர்ச்சி, சமூகத் தொடர்புகள், உடல் பருமன், தூக்கமின்மை மற்றும் கவனக் குறைவு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது.” இந்த ஆய்வு, அதிகப்படியான திரைநேரம் குழந்தைகளின் மொழி வளர்ச்சியை தாமதப்படுத்துவதாகவும், அவர்களின் புரிதல் திறனையும் சமூகத் திறன்களையும் பாதிப்பதாகவும் தெரிவிக்கிறது.

மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அமைதிப்படுத்தவோ அல்லது உணவு உண்ண வைக்கவோ திரைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்,” என்று அவர் அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தாங்களும் திரைநேரத்தைக் குறைத்து, குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

ஆய்வின் இணை ஆசிரியர் டாக்டர் எம். ஸ்வாதி ஷெனாய் இது குறித்து பேசும்போது ” இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை விளக்கினார்: “2 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு திரைநேரம் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமி (AAP) பரிந்துரைக்கின்றன. ஆனால், எங்கள் ஆய்வில் இந்த வயதினர் 1.2 மணிநேரம் திரைகளைப் பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.” எனவும் தெரிவித்தார்.

மேலும், தொடர்ந்து பேசிய அவர் ” அதிக திரைநேரம் குழந்தைகளின் மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது, குறிப்பாக மொழி புரிதல் மற்றும் உரையாடல் திறன்களை. பெற்றோர்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட்டு அவர்களிடம் விளையாடுவது மற்றும் புத்தகங்கள் படிப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.”எனவும் தெரிவித்தார்.

மேலும், “பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். குழந்தைகள் திரைகளைப் பயன்படுத்துவதற்கு முன், பெற்றோர்கள் தங்கள் சொந்த திரைநேரத்தைக் குறைக்க வேண்டும்,” என்று டாக்டர் ஷெனாய் கூறினார். இந்த ஆய்வு, குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு திரைநேரத்தைக் குறைப்பது மற்றும் பெற்றோர்-குழந்தை தொடர்பை மேம்படுத்துவது அவசியம் என்று வலியுறுத்துகிறது. எய்ம்ஸ் ராய்ப்பூரின் இந்த ஆய்வு, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்