யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
யானை சின்னத்தை தவெக கொடியில் பயன்படுத்த தடை கோரிய வழக்கை பகுஜன் சமாஜ் கட்சிவாபஸ் பெற்றுள்ளது.

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு இடைக்காலத் தடை கோரி பகுஜன் சமாஜ் கட்சி (BSP) சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை, இடைக்கால மனுவைத் திரும்பப் பெற்றுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் சின்னம் யானை. இதன் காரணமாக இந்தக் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் கொடியில் யானை படத்தைப் பயன்படுத்துவதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தது. தவெகவின் கொடியில் உள்ள யானை, தங்களுடைய தேர்தல் சின்னத்துடன் ஒத்திருப்பதாகவும், இது தேர்தல் விதிகளை மீறுவதாகவும், மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் BSP வாதிட்டது.
அதனால், தவெகவின் கொடியில் யானை சின்னத்தைப் பயன்படுத்துவதற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும் என்று ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்திருந்தனர். ஆனால், தவெக தரப்பு இதற்கு எதிராக வாதிட்டது. அப்பொழுது, “எங்களுடைய கொடியில் உள்ள யானை ஒரு குறியீடு (symbol) மட்டுமே, இது BSP-யின் தேர்தல் சின்னத்துடன் தொடர்புடையது அல்ல. நாங்கள் தேர்தலில் இந்த யானையை சின்னமாகப் பயன்படுத்தவில்லை, இது வெறும் கொடியின் வடிவமைப்பு மட்டுமே என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில், ஜூலை 11ம் தேதி இந்த இடைக்காலத் தடை குறித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவிருந்தது. ஆனால், இப்போது BSP தங்களுடைய இடைக்காலத் தடை மனுவை திரும்பப் பெற்றுவிட்டது.
அதாவது, தவெகவின் கொடியில் யானை படத்தை உடனடியாகத் தடை செய்யக் கோரிய கோரிக்கையை அவர்கள் வாபஸ் வாங்கிவிட்டனர். இருப்பினும், BSP தங்களுடைய பிரதான வழக்கை (முக்கிய வழக்கு) தொடர்ந்து நடத்த உள்ளதாகக் கூறியுள்ளனர். அதாவது, இந்த விவகாரத்தில் முழுமையாக ஒரு தீர்ப்பு வரும் வரை வழக்கு தொடரும். ஆனால், தற்போதைக்கு உடனடித் தடை என்ற கோரிக்கை மட்டும் பின்வாங்கப்பட்டுள்ளது.