ஓரணியில் தமிழ்நாடு: ‘பொதுமக்களிடம் OTP பெற தடை’ – உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.!
திமுகவின் `ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கைக்காக வாக்காளர்களிடம் OTP எண் பெற உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்து உத்தரவிட்டது.

மதுரை : தமிழ்நாட்டில் திமுக கட்சி “ஓரணியில் தமிழ்நாடு” என்ற ஒரு முன்னெடுப்பைத் தொடங்கியது. இதன் மூலம் பொதுமக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க முயற்சி செய்கிறார்கள். ஆனால், இந்த உறுப்பினர் சேர்க்கைக்காக மக்களிடம் அவர்களின் செல்போன் எண்ணுக்கு வரும் OTP (ஒரு முறை கடவுச்சொல்) மற்றும் சில சமயங்களில் ஆதார் விவரங்களையும் கேட்கிறார்கள்.
இதை எதிர்த்து, சிவகங்கையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். அதாவது, ”OTP மற்றும் ஆதார் விவரங்களை கேட்பது மக்களின் தனியுரிமையை (privacy) மீறுவதாகவும், இது அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானது என்றும் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், ஓரணியில் தமிழ்நாடு மூலம் உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம், ஆனால், OTP கேட்கக்கூடாது என உத்தரவிட்டு, டிஜிட்டல் முறையில் தனிநபர் தரவுகள் எவ்வாறு பாதுகாக்கப்படுகின்றன என்பது குறித்து அரசு விளக்கமளிக்க அறிவுறுத்தியுள்ளது. மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தை வழக்கில் சேர்க்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.