இதுபோன்று 100 சம்பவங்கள் நடக்கின்றன.. மணிப்பூர் முதலமைச்சர் பைரேன் சிங் பேட்டி!

மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என அம்மாநில முதல்வர் பேட்டி.
கடந்த சில மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியது. இதனால், 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளி ஊர்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், மணிப்பூரில் வன்முறை தொடர்ந்து வருகிறது.
பெண்களுக்கு கொடூரம்:
இந்த சூழலில், மணிப்பூரில் குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வாணமாக இழுத்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே மாதம் 4ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டையே உலுக்கியுள்ள இந்த சம்பவம் 77 நாட்கள் ஆன பிறகு வெளி உலகிற்கு தெரிய வந்துள்ளது.
வலுக்கும் கண்டனம்:
இந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சியை கேள்வி எழுப்பி வருகின்றனர். கண்டங்களை தெரிவித்து, மணிப்பூரில் பெண்களுக்கு கொடூரம் இழைக்கப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர். இந்த நிலையில், பிரபல ஊடகத்துக்கு பேட்டியளித்த மணிப்பூர் முதலமைச்சர் அந்த சம்பவம் தொடர்பாக வேதனை தெரிவித்தார்.
மணிப்பூர் முதலமைச்சர் வேதனை:
மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங் கூறுகையில், மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோவை கண்டு மிகுந்த வேதனை அடைந்தேன். இதுபோன்று 100 சம்பவங்கள் இங்கு நடக்கிறது அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ஒரு வீடியோ மட்டுமே பரவி உள்ளது. இதனால் தான் மாநிலம் முழுவதும் இணையசேவை முடக்கப்பட்டது.
மனித இனத்திற்கே எதிரானது:
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, இதற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். இப்படி ஒரு குற்றம் மனித இனத்திற்கே எதிரானது, இதில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியை பெற்று தருவோம் என பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தை அடுத்து, மணிப்பூர் கலவரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், முதல்வர் வேதனை தெரிவித்தார்.
மரண தண்டனை:
இதற்கு முன் அவரது ட்விட்டர் பக்கத்தில், 2 பெண்களுக்கு எதிராக நடந்த இந்த மனிதாபிமானமற்ற கொடூர செயல் நெஞ்சை கிழிப்பது போல் இருக்கிறது. இந்த வீடியோ வெளியான உடனேயே, மணிப்பூர் காவல்துறை நடவடிக்கையில் இறங்கி, இன்று காலை முதல் கைது நடவடிக்கையை மேற்கொண்டது. நமது சமூகத்தில் இதுபோன்ற கேவலமான செயல்களுக்கு இடமே இல்லை என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். குற்றவாளிகள் அனைவருக்கும், மரண தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுப்பதையும் உறுதி செய்வோம் என குறிப்பிட்டிருந்தார்.