’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?
நீங்கள் வயதாகிவிட்டீர்கள் ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வர விடுங்கள் என மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத், “75 வயதாகிவிட்டால், மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டீர்கள், இப்போது ஒதுங்கி, இளையவர்களை முன்னேற அனுமதிக்க வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேச்சு, அரசியல் தலைவர்கள் 75 வயதை எட்டிய பிறகு பதவியில் இருந்து விலகி, இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதாக இருந்தது.
வரும் 2025 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 வயது நிறைவடைய உள்ளதால், இது அவரைப் பற்றிய பேச்சு என்று எதிர்க்கட்சிகள் கூறி, விவாதத்தைத் தூண்டின. இது அரசியல் வட்டாரத்திலும் பேசுபொருளாக மாறியுள்ளது. நாக்பூரில், ஆர்.எஸ்.எஸ். மூத்த தலைவர் மோரோபந்த் பிங்லி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய பகவத், “75 வயதில் தலைமைப் பொறுப்புகளை விட்டு, இளையவர்களுக்கு வழிவிட வேண்டும்” என்று கூறினார்.
எதிர்க்கட்சிகள் இந்தக் கருத்தை பிரதமர் மோடியை குறிப்பிடுவதாக விமர்சித்து, “மோடி 75 வயதில் ஓய்வு பெறுவாரா?” என்று கேள்வி எழுப்பினர். சமூக ஊடகங்களில், “இது மோடிக்கு உரைக்கப்பட்டதா?” என்று பதிவுகள் வைரலானது. செப்டம்பர் 2025-ல் பகவத்திற்கும் 75 வயது நிறைவடைய உள்ளதால், ஆர்.எஸ்.எஸ். தலைவர் பதவியில் இருந்து அவரும் விலகலாம் என்று சிலர் கருதுகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். இதுவரை இந்தப் பேச்சுக்கு விளக்கம் அளிக்கவில்லை. பாஜகவினர், இது பொதுவான அறிவுரை என்றும், மோடியின் பதவியைப் பாதிக்காது என்றும் கூறுகின்றனர். இருப்பினும், இந்தப் பேச்சு பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இல் எதிர்கால தலைமை மாற்றம் குறித்து பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.மோகன் பகவத், 1977 முதல் ஆர்.எஸ்.எஸ். தொண்டராகவும், 2009 முதல் தலைவராகவும் உள்ளார். இந்து-இஸ்லாமிய நல்லிணக்கத்திற்கு முயற்சித்தவர். அவரது இந்தக் கருத்து, தலைமைப் பொறுப்புகளை இளையவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாட்டை தெளிவாக்குகிறது.