இமாச்சலப் பிரதேசம்: மேகம் வெடிப்பில் சிக்கி 7 பேர் பலி, 3 பேர் காணவில்லை, 5 பேர் மீட்பு!

இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக மேகம் வெடிப்பு காரணமாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால், அம்மாநிலத்தில் பல இடங்களில் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பாக இமாச்சல பிரதேசத்தில் மேக வெடிப்பு காரணமாக கொட்டி தீர்த்த கனமழையால், அங்குள்ள சோலன் மாவட்டம் ஜாடோன் கிராமத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், இமாச்சலப்பிரதேசம் சோலனில் உள்ள கண்டகாட் துணைப்பிரிவின் ஜடோன் கிராமத்தில் மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3 பேர் காணவில்லை எனவும் கூறப்படுகிறது. மேலும், 5 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் கூறியுள்ளது.
இதில், வெள்ளப்பெருக்கில் 2 வீடுகள் மற்றும் ஒரு மாட்டு தொழுவமும் அடித்து செல்லப்பட்டது. முன்னதாக, இடைவிடாத மழைக்கு மத்தியில் அம்மாநிலத்தில் சுமார் 200 சாலைகள் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. மேக வெடிப்பு காரணமாக 7 பேர் உயிரிழந்ததற்கு அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என கூறியுள்ளார். மேலும், கனமழை காரணமாக இமாச்சல பிரதேசத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.