போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!
சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் இந்தியாவின் முயற்சிக்கு எந்த ஒரு நாடும் ஆதரவு தர முன்வரவில்லை என மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக் கொள்கையை விமர்சித்து, அவரது 151 வெளிநாட்டுப் பயணங்கள் (72 நாடுகளுக்கு, குறிப்பாக அமெரிக்காவுக்கு 10 முறை) மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானை அம்பலப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்காதது என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” கடந்த 11 ஆண்டுகளாக பிரதமர் மோடி தொடர்ந்து வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டு வந்தாலும், இன்று நமது இந்தியா தனிமையில் உள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியாவுக்கு எந்தவொரு நாடும் ஆதரவு அளிக்கவில்லை. மாறாக, பாகிஸ்தானின் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கின்றன.
மேலும், ஐஎம்எஃப் (IMF) 1.4 பில்லியன் டாலர் கடனை வழங்கி பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்துள்ளது. கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி 151 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து, 72 நாடுகளுக்கு பயணித்துள்ளார். இதில் அவர் 10 முறை அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். இருப்பினும், மோடி அரசின் வெளியுறவுக் கொள்கையால் நமது நாடு தனிமையாகவே நிற்கிறது. வெளிநாடுகளுக்கு சென்று புகைப்படங்களுக்கு முகம் காட்டுவது மட்டுமே பிரதமரின் வேலையா? பயங்கரவாதிகளுக்கு எதிராக நமது படைகள் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தபோது, திடீரென யுத்த நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான யுத்த நிறுத்தத்திற்கு ‘நான் மத்தியஸ்தம் செய்தேன்’ என்று சுமார் 7 முறை கூறி, நமது நாட்டை அவமானப்படுத்தியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுப்போம் என்று கூறிய பிரதமர், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் இந்த அறிக்கைகள் குறித்து இதுவரை நாட்டு மக்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்காமல், இந்த விவகாரத்தை மூடி மறைக்க முயற்சிக்கிறார்” எனவும் மல்லிகார்ஜுன கார்கே தன்னுடைய பதிவில் கூறியிருக்கிறார்.