ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு.., 100 பேர் சிக்கி தவிப்பு.!
ஆதி கைலாஷ் யாத்திரைப் பாதையில் நிலச்சரிவு, நூற்றுக்கணக்கான யாத்ரீகர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆதி கைலாஷ் யாத்திரை பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பக்தர்கள், உள்ளுர் மக்கள் 100 பேர் சிக்கித் தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதிகைலாஷ் பகுதியில் ஏற்பட்ட இந்த நிலச்சரிவால் யாத்திரை செல்லும் பாதை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
சாலைகளில் கொட்டிக்கிடக்கும் மணல் மற்றும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடந்து வருகின்றன. நிலைமையை சாலைகள் அமைப்பின் (BRO) குழு உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது, நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆதி கைலாஷ் யாத்திரை என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் குமாவோன் பகுதியில் உள்ள ஒரு புனிதமான இந்து யாத்திரை ஆகும். ஆதி கைலாஷ் ‘பஞ்ச கைலாஷ்’ (ஐந்து கைலாஷ்கள்) இல் இரண்டாவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
இந்தப் பாதையின் பெரும்பகுதி வாகனம் ஓட்டக்கூடியதாக இருந்தாலும், சில பகுதிகள் மலையேற்றம் செய்ய வேண்டியிருக்கும். இந்தப் புனித யாத்திரை 5,945 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது, மழைக்காலங்களில் இந்தப் பாதை கடுமையான நிலச்சரிவுகளுக்கு வழிவகுக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.