மணிப்பூர் சம்பவம்: பாதிக்கப்பட்ட பெண்களிடம் வாக்குமூலம் பெற கூடாது – சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

மணிப்பூரில் தொடர் வன்முறைக்கு மத்தியில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக அழைத்து சென்ற வீடியோ காட்சி சமீபத்தில் சமூகவலைத்தளங்களில் வெளியாகி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுதொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் நேற்று, மணிப்பூரில் நடந்தது ஒரு சம்பவம் மட்டும்தானா? என சரமாரியான கேள்விகளை முன்வைத்திருந்தது. மேலும், மணிப்பூர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரம் தொடர்பாக பெண் நீதிபதிகளைக் கொண்ட குழுவை அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், மணிப்பூரில் பாதிக்கப்பட்ட 2 பெண்களிடம் வாக்குமூலம் பெறுவதை நிறுத்தி வைக்க வேண்டும் என சிபிஐக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடர்பான மனுக்கள் இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரிக்கப்பட உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் வாக்குமூலம் பெற தடை விதித்துள்ளது.
பெண்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிஜாம் பாஷா, தனது அறிக்கையை சமர்ப்பித்தார். இதனை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கவனத்தில் கொண்டு, பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சிபிஐக்கு ஆணையிடப்பட்டுள்ளது.