விஷவாயு கசிந்த விவகாரம்..! இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு..! பஞ்சாப் சுகாதார அமைச்சர்

Punjabgasleak

பஞ்சாப் லூதியானாவில் விஷவாயு கசிவில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு.

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை விஷவாயுக் கசிவு ஏற்பட்டது. கியாஸ்புரா பகுதியில் உள்ள தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டதில் 9 பேர் உயிரிழந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். முன்னதாக, வாயுவின் தன்மை பற்றி இன்னும் அறியப்படாததால்  அப்பகுதியில் உள்ள மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்புறப்படுத்தும்படி லூதியானாவின் மேற்கு துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஸ்வாதி திவானா கூறினார்.

அந்தவகையில், போலீசார் அப்பகுதியை சீல் வைத்து மக்கள் யாரும் அப்பகுதிக்குள் வராமல் பாதுகாத்துவருகின்றனர்.மேலும், இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் வாயுக்கசிவு சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளதோடு, இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், தற்பொழுது பஞ்சாப் சுகாதார அமைச்சர் டாக்டர் பல்பீர் சிங் கூறுகையில், விஷவாயுக் கசிவினால் இதுவரை 11 பேர் இறந்துள்ளனர், 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை இழப்பீடும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும். என்று அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்