ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் பலி! பாதுகாப்புத் துறை அமைச்சர் தகவல்!
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூரில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக நேற்று அதிகாலை (1.40 மணியளவில்) இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பதிலடி தாக்குதலை பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது நடத்தியது.
இந்த தாக்குதலில் சுமார் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என்றும், ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் ஆகிய பயங்கரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் இந்திய ராணுவத்தால் குறிவைத்து அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள இந்த முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதால் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆபரேஷன் சிந்தூரை அடுத்து பிரதமர் மோடி தலைமையில் ஏற்கனவே அமைச்சரவை கூட்டம் நடைபெற்ற நிலையில், இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் , ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்த பயங்கராதிகள் எண்ணிக்கை குறித்து பேசியுள்ளார்.
அதில், இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல் தெரிவித்துள்ளார் என PTI செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.