கேரள செவிலியருக்கு தூக்குத் தண்டனை.! ஏமனில் நடந்தது என்ன?

பங்குதாரருக்கு விஷ ஊசி போட்டு கொலை செய்த வழக்கில் நிமிஷா பிரியா மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளார். இப்பொது காப்பாற்ற இறுதிக்கட்ட முயற்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

yemen nimisha priya

ஏமன் : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, ஏமனில் 2017-ம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மெஹதியைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். இவருக்கு வருகின்ற ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அந்நாட்டு சிறைத்துறையினர் தகவல் தெரிவித்துள்னர்.

இந்தியாவின் கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் நிமிஷா பிரியா. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த நிமிஷா தனது நர்சிங் படிப்பை முடித்துவிட்டு 2011 இல் வேலைக்காக ஏமனுக்குச் சென்றார். அவரது எதிர்காலம் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக அவரது பெற்றோர் அவரை கூலி வேலை செய்து வெளிநாட்டிற்கு அனுப்பினர்.

ஏமனின் சனாவில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்த நிலையில், 2015-ல் உள்ளூர் கூட்டாளியான தலால் அப்தோ மெஹதியுடன் இணைந்து கிளினிக் தொடங்கினார். நாளடைவில் அவர்களது உறவு தலைகீழாக மாறியிருக்கிறது. நிமிஷாவின் கூற்றுப்படி, தலால் அவரது பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்து, அவரை அச்சுறுத்தியதாகவும், நிதி மோசடி செய்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைத் தொடர்ந்து, தனது பாஸ்போர்ட்டை மீட்க முயன்றபோது, தலாலுக்கு மயக்க மருந்து செலுத்தியதில் அளவுக்கு அதிகமான மருந்து செலுத்தப்பட்டு, அவர் இறந்துவிட்டார். இதன்பின், 2018-ல் நிமிஷா கைது செய்யப்பட்டு, 2020-ல் சனாவில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பு 2023-ல் ஏமன் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது, 2024 டிசம்பர் 30-ல் யேமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி இந்த மரண தண்டனையை அங்கீகரித்தார்.

ஏமன் சட்டப்படி, “தியா” (ரத்தப் பணம்) எனப்படும் இழப்பீட்டுத் தொகையை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டால், மரண தண்டனையை தவிர்க்க முடியும். இதற்காக, நிமிஷாவின் குடும்பத்தினர் மற்றும் பிற ஆதரவாளர்களால் ‘save Nimisha Priya’ என்கிற சர்வதேச நடவடிக்கை கவுன்சில் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்க முயற்சித்து வருகின்றனர்.

ஆனால், இதுவரை பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் இதற்கு சம்மதிக்கவில்லை. நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, கடந்த ஒரு வருடமாக ஏமனில் இருந்து, தனது மகளை காப்பாற்ற முயற்சித்து வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் நிமிஷாவின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இருப்பினும், ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சனாவில் உள்ள சிறையில் நிமிஷா இருப்பதால், இந்திய அரசின் நேரடி தலையீடு சிக்கலாக மாறியுள்ளது. தற்போது, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காக, இந்திய அரசு மற்றும் ஆர்வலர்கள் இறுதி முயற்சியாக பேச்சுவார்த்தைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்